பக்கம்:சாமியாடிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீடியோ ஆடியோ தாக்கம் கீழோங்கியும் உள்ளன. இந்த வலைப் பின்னலில் குடும்பத்தைத் தவிர வேறு எதையுமே நினைத்துப் பார்க்காத கோலவடிவு என்ற இளம்பெண்ணை, நாலும் தெரிந்த அலங்காரி என்பவள் எப்படி தனது பேச்சுத் திறமையால் மயக்கி துளசிங்கத்திடம் இணைத்து விடுகிறாள் என்பதுதான் கதை. இதனால் ஏற்படும் குடும்பச் சிக்கல்களும், பங்காளிச் சண்டைகளும் யதார்த்தத்தில் ஒரு இம்மிகட பிசகாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலின் நாயகியான கோலவடிவை, கிராமத்தை விட்டு வெளியேறச் செய்து, சுயநலமிகளிடம் சிக்கி வேறு வழியில்லாமல் விலைமகளாக ஆக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், மனம் கேட்கவில்லை. ஒரு எழுத்தாளன், துவக்கத்தில் பாத்திரங்களைப் படைப்பான். குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரங்களே, இப்படி இப்படி எங்களை படைப்பாயாக. என்று எழுத்தாளனுக்கு ஆணையிடும் என்று மகத்தான விமர்சகரான காலஞ்சென்ற பொதுவுடைமைத் தத்துவ சிந்தனையாளர் தோழர் ஆர்.கே. கண்ணன் அவர்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார். அப்படி அவர் குறிப்பிட்டது, இந்த நாவலில் என்னை அறியாமலேயே, என் விருப்பத்திற்கு எதிராகவே நிறைவேறி விட்டது உண்மைதான். இந்த நாவலில் கோலவடிவே, என் முடிவை இப்படித்தான் விளக்கியாக வேண்டும் என்று எனக்கு ஆணையிட்டு விட்டாள். அந்த ஆணையை என்னால் மீற முடியவில்லை. இது, ஒரு படைப்பியல் விசித்திரம். படைப்பாளி நினைத்தும் அவன் நினைத்ததுபோல் எழுத முடியாது என்பதற்கு நானே ஒரு உதாரணமாகி விட்டேன்.

கிராமத்தில் நிகழும் வீடியோ ஆடியோ கலாச்சாரத்தையும், சொல்வடைகளின் மாற்றத்தையும் முதன்முதலாக வாசகர் கவனத்திற்கு கொண்டு வந்த முதலாவது நாவல் இது என்று குறிப்பிடலாம். இந்த நாவலை பிரசுரத்திற்கு எடுத்துக்கொண்ட பெரியவர். திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அசல் நகல்களாக விளங்கும் அருமை புதல்வர்கள் ராமு, சோமு. ஆகியோருக்கும் இந்த நாவலின் வெற்றி உரித்தாகும்.


சு. சமுத்திரம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/7&oldid=983057" இலிருந்து மீள்விக்கப்பட்டது