பக்கம்:சாமியாடிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிராமங்களைத் திணறடித்த இந்தத் தாக்கத்தை சித்தரிப்பதில் இதன் நல்ல அம்சங்கள் நழுவிப் போயின. என்றாலும், எந்தப் பதிப்பிலும் எழுதியது எழுதியபடி இருக்கவேண்டும் என்பதால் இந்த நாவலை அவர் குறிப்பிட்டதுபோல் மாற்றி அமைக்கவில்லை.

இன்றையக் கிராமங்களில், அம்மன் கொடைகள் என்பவை கிராம தேவதைகளுக்குக் காட்டப்படும் சலுகைகளாக மாறிவிட்டன. இவற்றில் பயபக்தி என்பது கடந்த காலமாகி விட்டது. இந்த திருவிழாக்களில் “டெக்கில்” படம் போடுவதே பிரதானமாகி விட்டது. சாமியாடிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒப்புக்கு ஆடி அடங்கவேண்டும். இவர்களை சீரியஸாக எடுத்துக் கொண்ட காலம் மலையேறி விட்டது. இவர்களும் அதை உணர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியாட்டத்தை முடித்து விடுகிறார்கள். கிராம தேவதைகள், கிராம மக்கள் அனைவருக்கும் பொதுமையானது என்பதுபோய் ஒவ்வொரு பங்காளிக் கூட்டமும், தத்தம் கிராம தேவதைகளை தங்களது சுயமரியாதையோடு இணைத்துக் கொள்கிறது. இதனால் பங்காளிக் கூட்டங்களுக்கு இடையே, மோதல்களும் கெளரவப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இது, வீடியோ ஆடியோ கலாச்சாரம் தொடுத்த முதல் தாக்குதல்.

இரண்டாவதாக, கிராமிய பேச்சு வழக்கை தொலைக்காட்சித் தமிழ் வழக்கு துரத்திக் கொண்டிருக்கிறது. ‘அண்ணாச்சி’ என்ற மண்வாசனை வார்த்தை ‘அண்ணே’வாகி விட்டது. ‘மயினி’ என்பது ‘அண்ணி’ ஆகிவிட்டது. ‘வளத்தம்மா’, ‘அய்யாமை’ என்ற பொருள் பொதிந்த உறவாடல் வார்த்தைகள் ‘பாட்டி’ என்று நேரிலும், ‘பெரிசு’ என்று மறைமுகமாகவும் பேச்சு வழக்காகி விட்டது. தொலைக்காட்சி திரைப்படங்களும் வீடியோவில் காட்டப்படும் திரைப்படங்களும் அன்றாடப் பொழுதுபோக்காகி விட்டது. ஆக மொத்தத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு வாழ்க்கைக்கும், வீடியோ திரைப்படங்களுக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் போய்விட்டது.

இதனால் ஏற்படும் குடும்ப, சமூகச் சிக்கல்களை, இந்த நாவல் கதைப் பின்னலாகக் கொண்டு வந்துள்ளது. கிராமங்களில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் ஊடுறுவிய முதலாவது காலக்கட்டத்திலேயே இது எழுதப்பட்டதால், இந்தப் புதினத்தில் கதை மேலோங்கியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/6&oldid=983010" இலிருந்து மீள்விக்கப்பட்டது