பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



23

உரிமைகளைச் சலுகைகள் போல் பெறும் மௌட்டீகம் நிறைந்த மக்களும் கடமைகளை உதவிகள் போலச் செய்யும் திமிர் பிடித்த அதிகார வர்க்கமும் உள்ள நாட்டில் சுதந்திரமாவது, ஜனநாயகமாவது?


ந்த ஒரு சமூக விரோத சக்தியும் உடனே ஓய்ந்து விடுவதில்லை என்று தெரிந்தது. ‘என் விருப்பத்துக்கு அடி பணிந்து விடு! இல்லையானால் உன்னை ஒடுக்கிவிடுவேன்’ என்பதுபோல் மிரட்டும் சக்தி ஒவ்வோர் கெட்டவனுக்கும் இருந்தது. லஞ்சமும், கலப்படமும் இரட்டைக் குழந்தைகளாயிருந்தன!

வர்த்தகத்தில் இலஞ்சம் கொடுப்பதற்கும் சேர்த்து லாபம் சாம்பாதிக்க வேணுமானால் கலப்படம் செய்தே ஆக வேண்டியிருந்தது. உணவு விடுதிகளும், உண்ணும் பொருள்களும்கூட இதற்கு விதிவிலக்காக இல்லை...

அதே மைலாப்பூரில் சுகாதாரத் தேவைகளையே நிறைவு செய்யாத எத்தனையோ உணவு விடுதிகள் மாநகராட்சியின் சுகாதார இலாகாவுக்கு மனக்குறை ஏற்படாமல் அவர்களை அவ்வப்போது ‘கவனித்து’ விட்டுப் பிரமாதமாக நடந்தன. இதுவரை முத்தக்காளும் அப்படித்தான் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், பூமியைப் போல் வளைந்துகொடுக்க மறுத்த மனிதன் வந்த பிறகுதான் அங்கே சிக்கல்கள் உண்டாயின; சிரமங்கள் கண்ணுக்குத் தென்பட்டன.

ஒரு நாட்டின் சுதந்திரமும், ஜனநாயகம் அதன் எல்லா மக்களுக்கும் நியாயமான சிவில் உரிமைகளைத் தரமுடியும்.