உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

சாயங்கால மேகங்கள்

சக ஆசிரியைகளின் பிரச்னை ஒன்று வந்து சேர்ந்தது. பூமியோடு பழகத் தொடங்கிய பின் சித்ரா பள்ளியில் மாலை நேர ‘டியூஷன்களை’ விட்டு விட்டாள். தேவகி முதலிய மற்ற ஆசிரியைகள் பள்ளி விட்ட பின் ஒரு மணி நேரத்துக்கு மாலை நேர டியூஷன் எடுத்தார்கள். திடீரென்று அந்த மாத முதல் தேதியிலிருந்து அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் மாலைநேர டியூஷன்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டும் அந்த அதிகப்படி வேலைக்காக ஆசிரியைகளுக்குக் குறைந்த தொகையே ஊதியமாகத் தரப்பட்டு வந்தது.

“எங்களுக்கு அதிக டியூஷன் ஊதியம் தராவிட்டாலும் பரவாயில்லை. குழந்தைகளின் பெற்றோர்களிடம் கொள்ளையடிக்காமல் இருக்கட்டும். எங்களைச் சாக்குக் சொல்லி அவர்களிடம் கொள்ளையடிக்கக் கூடாது” என்று ஆசிரியைகள் அபிப்ராயப் பட்டார்கள்.

கல்வியின் பெயரைச் சொல்லிக் கற்பவர்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கற்பிப்பவர்களுக்கும் பயன் படாமல் இடைத் தரகர்கள் கொள்ளையடிப்பதைத் தவிர்க்க வேண்டி யிருந்தது. வேண்டி வருபவர்களுக்கு எல்லாம் ‘வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது’ என்று. பெருமித உணர்வுடன் வித்யாதானமாகக் கல்வியை வாரி வழங்கி விட்டு நிமிர்ந்து நின்ற ரிஷிகளின் காலமும் திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர்களின் காலமும் முடிந்து போய் சம்பளம், அலவன்ஸ், வீட்டு வாடகைத் தொகை என்று கற்பிப்பதற்கும் கற்பதற்கும் விலைகள் வந்து விட்ட காலத்தில் தான் அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

நகரங்களில் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் ஒரு காய்கறிகடை, ஒரு சலூன், ஒரு லாண்டிரி எல்லாமும் போல் ஒரு பள்ளிக்கூடமும் தேவைப்பட்டது. சலூனும், காய்கறிக் கடையும், லாண்டிரியும் திறந்து கட்டணத்துக்கு வேலை செய்து தருவதுபோல் நர்ஸரி கான்வெண்ட் பள்ளிகளைத் திறந்து வித்யா வியாபாரம் நடத்தப்பட்டு வந்தது. கல்வியின் சூப்பர்