பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

சாயங்கால மேகங்கள்

"உங்ளுெக்கென்ன வந்தது? நீங்க பேசாம இருங்க” என்று சித்ரா கூட அவனை உரிமையோடு கடிந்து கொண்டாள்.

பூமிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த ஆளை நோக்கிக் கத்தினான்.

“என்னய்யா நீர் மனிதன்தானா? இல்லை மரமா? உம் மணிபர்ஸை எடுத்துக்கொண்டு ஒருவன் ஓடுவதைப் பார்த்த பிறகும் இடிச்சபுளி மாதிரி உட்கார்த்திருக்கிறீர்?”

இதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. முன்பு போலவே பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடுவதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றிய அந்த ஆசிரியைகளைவிட இந்தப் பஸ் பிராயணி தன்னை அதிகம் ஏமாற்றி விட்டதாகப் பூமி உணர்ந்தான்.

லஸ்ஸில்தான் அந்தப் பிராயணியும் இறங்கினார். பூமியும் சித்ராவும் அவருக்குப் பின் இறங்கினார்கள்.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியதும் அக்கம்பக்கம் பார்த்து விட்டுப் பூமியை நெருங்கி அந்த மனிதர், “தப்பா நினைச்சுக் காதீங்க சார்! அவன் என் சட்டைப் பையை பிளேடாலே அறுக்கிறது எனக்கே நல்லாத் தெரிஞ்சும் நான் வேணாம்னுதான் சும்மா இருந்தேன். இவங்கள்ளாம் பயங்கரமான ரெளடிங்க, கூப்பாடு போட்டு இவங்களை நாம் காட்டிக் குடுத்தோம்னா நம்மை ஞாபகம் வச்சிருந்து நாளைக்கிக் கருக்கட்டிக் கிட்டு அலைவாங்க. என் பர்ஸிலே இருந்தது என்னமோ வெறும் அஞ்சு ரூபாய்தான். அவனை நான் கையும் களவுமாகப் பிடிச்சிருந்தேன்னா, அவன் என்னைப் பிளேடாலே கீறி, நான் டாக்டருக்கும் போலீஸுக்குமாத் தொடர்ந்து செலவழிக்க வேண்டியிருக்கும். அதான் நான் கண்டுக்கவே இல்லே” என்றார்.

கூறிவிட்டுப் பூமியின் பதிலை எதிர்பாராமலே புறப்பட்டுப் போய்விட்டார்.