சாயங்காள மேகங்கள்
179
"சும்மாப் புளுகாதே! நான் யாரய்யா பிக்பாக்கெட் அடிச்சேன்?”
“அதோ உட்கார்ந்திருக்கிறாரே அவரைத்தான்! அவர் ஜிப்பாப் பையைக் காட்டினால் நீ பிளேடாலே அறுத்திருக்கிறது தானே தெரியும்........”
“எங்கே? அவரைச் சொல்ல சொல்லு பார்க்கலாம். நான் அவரு பையை அறுத்திருந்தா அவரு ஏன்யா சும்மா குந்திக்கினு இருக்கணும்?”
உடனே பூமி முன்புறமிருந்த அந்தப் பிரயாணியைக் கூப்பிட்டு, “சார் உங்களைத்தானே...கொஞ்சம் எழுந்திருந்து உங்க ஜிப்பாப் பையைக் காட்டுங்க...” என்றான்.
“ஜிப்பாப் பை எல்லாம் சரியாகத்தான் இருக்கு சார்! அதெல்லாம் ஒண்ணும் காணாமற் போகல” என்றுத் திரும்பிப் பாராமலே பதில் சொன்னார் அந்தப் பிரயாணி. பூமிக்குத் திருடன் மேல் வந்த ஆத்திரத்தை விட இரண்டு மடங்கு ஆத்திரம் திருட்டுக் கொடுக்க இருந்த அந்த அப்பாவி மேல் வந்தது.
பிக்பாக்கெட்டைப் பிடித்திருந்த பிடியைக் கொஞ்சம் தளர்த்தி விட்டு அந்தப் பிரயாணியை எழுப்பி நிறுத்தி அவரது ஜிப்பாவில் வலது பக்கப்பை அறுத்து எடுக்கப்பட்டிருப்பதை அவருக்கும் மற்றப் பிரயாணிகளுக்கும் பூமி காட்டினான்.
அப்போது ஒரு ஸிக்னலுக்காக பஸ் நின்றிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு திருடன் கூட்டத்தில் புகுந்து பஸ்ஸின் பின்புற வழியாக இறங்கி ஓடி மறைந்து விட்டான்.
பர்ஸ் திருட்டுப் போயிருந்தும் அதைப் பறி கொடுத்தவர் சும்மா இருந்தது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“அட ஏன்ய்யா நீ ஒண்ணு? அந்த ஆளே கண்டுக்காமே இருக்கறப்ப உனக்கென்னய்யா வந்திச்சு?” ஒரு பிரயாணி பூமியைக் கேட்டார்.