பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
178
சாயங்கால மேகங்கள்
 

யடித்துக் கொண்டு ஏறினார்கள். எப்படியோ பெண்கள் உட்காரும் பகுதியில் சித்ராவுக்கு மட்டும் ஒண்டிக்கொண்டு உட்கார இடம் கிடைத்துவிட்டது. பூமி கூட்டத்தோடு கூட்டமாக நின்றபடி பயணம் செய்தான்.

பஸ் சிறிது தொலைவு நகர்ந்ததும் அவன் நின்ற இடத் லிருந்து தெரிந்த முந்திய பத்தியிலே நடந்த ஒரு சம்பவத்தைக் கண்டு திடுக்கிட்டான் பூமி.

ஓரமாக உட்கார்ந்திருத்த பிரயாணியின் ஜிப்பாப் பையை அதற்கு நேர் பின்புறம் அமர்ந்திருந்த ஓர் ஆள் பிளேடால் மெல்ல அறுத்துக் கொண்டிருந்தான். கூட்டத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. மணிபர்ஸை இழக்கப் போகிற அப்பாவியும் ‘தான் எதையோ பறி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்’ என்ற உணர்வே இன்றி முன் பக்கம் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகப் பூமி நின்ற இடத்திலிருந்து அது தெரிந்தது.

பூமி உடனே பாய்ந்து அந்த ஆளைப் பிடித்து விட்டான். பிடிக்க முயல்கிறவனைப் பிளேடால் அகப்பட்ட இடத்தில் கீறி விட்டு ஓடி விடுவது தான் “பிக்பாக்கெட்’ ஆசாமிகளின் வழக்கம். ஆனால் பூமியின்பிடி இரும்புப்பிடியாக இருக்கவே அவனால் திமிறவே முடியவில்லை.

பிடியைத் தளர்த்தாமல் இன்னும் முன்புறமாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த அந்த பிரயாணியைக் கூப்பிட்டு அவருடைய உடமைகள் சரியாயிருக்கிறதா என்று பார்க்கச் சொன்னான் பூமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பிரயாணி மிக அலட்சியமாகவும், அசிரத்தையாகவும் நடந்து கொண்டதுதான். பின்புறம் பார்த்துப் பூமிக்கு நன்றி சொல்லக் கூட அவர் தயாராயில்லை. திருடன் திமிறினான்.

“யோவ் நீ யாருய்யா என்னைப் பிடிச்சுகிட்டு...?”

“பின்னென்ன? பிக்பாக்கெட் அடிக்கிறவனைப் பிடிக்காமே மாலை போட்டுக் கும்பிடவா செய்வாங்க?"