பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

185

வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாகப் பம்பாய் செல்ல இருந்தார்.

சிங்கப்பூரில் இருந்த பூமியின் நண்பர்கள் இது பற்றிப் பூமிக்கு எழுதியிருந்தார்கள். பூமி தானும் தன்னால் கராத்தே கற்பிக்கப்பட்ட சீடர்களுமாகச் சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்க முடிவு செய்திருந்தான். மெஸ் இருந்த வீட்டை விலைக்கு வாங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் நடுவில் இந்த வேலை சேர்ந்தது.

சென்னை விமான நிலையத்தில் கராத்தே வீரருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சித்ரா அவனுக்கு உதவியாயிருந்தாள். வேறொர் ஆளிடம் ஓட்டுவதற்குக் கொடுத்திருந்த தன் ஆட்டோவையே கேட்டு வாங்கி மீட்டரைத் துணியினால் கட்டி விட்டுத்தானே ஓட்டிச் சென்று நண்பர்களை எல்லாம் சந்தித்துக் கராத்தே உடையிலேயே அவர்கள் எல்லோரும் விமான நிலையம் வந்து சேருமாறு தெரிவித்தான் பூமி.

தான் செய்த இந்த ஏற்பாடு புதுமையாகத்தான் இருக்கும் என்பது அவன் கருத்து. உண்மையில் அது புதுமையாகத்தான் இருந்தது. ஒரே விதமான கராத்தே உடையில் இருபது முப்பது பேரை விமான நிலையத்தில் கூட்டமாகப் பார்த்ததும் வந்த விருந்தினருக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பூமி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு மாலையணிவித்தபோது அருகிலிருந்த சித்ராவைச் சுட்டிக் காட்டி ‘உன் மனைவியா?’ என்று அந்த ஜப்பானியக்கராத்தே வீரர் உற்சாகமாக விசாரித்தார்.

பூமி, ‘இல்லை’ என்றான்.

“அப்படியானால் காதலியா?” என்று அவரே மீண்டும் கேட்ட போது, ‘இவள் என் சிநேகிதி’ என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் பூமி. “ஆமாம்! சில சமயங்களில் காதலியை விடச் சிநேகிதி தான் உயர்ந்தவள்” என்று பூமிக்கு அவர் புன்னகையோடு