சாயங்கால மேகங்கள்
195
இருண்ட தெரு முனைகளில் பெண்களின் கழுத்துச் சங்கிலிகள், நகைகளை அறுப்பது, கொள்ளையடிப்பது, வீடுகளில் புகுந்து திருடுவது, மோட்டார் சைக்கிளில் துரத்தித் திருடுவது என்று பல குழுக்கள் அந்தச் செல்வாக்கில் குளிர்காய்ந்து கொண்டிருந்தன. வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுப் ‘பில்’ பணத்தைக் கொடுக்காமலே சண்டைப் போட்டுவிட்டு வெளியேறிப் பல ஹோட்டல்களை ஏமாற்றும் ரவுடிகளும் அந்தக் குழுவில் இருந்தார்கள்.
ஹோட்டல்காரர்கள் தகராறு செய்தால் மறு நாள் கும்பலாக உள்ளே நுழைந்து சாப்பிட்டு விட்டுப் பிளேட்டுகள், பீங்கான் கிண்ணங்களை உடைத்துக் கலவரம் புரிந்து விட்டு வெளியேறினார்கள் ரவுடிகள். அந்த வட்டாரம் முழுவதுமே தொல்லையை அநுபவித்தது. ஆனால் யாருமே பூனைக்கு மணி கட்டத் தயாராயில்லை. தலைவிதியே என்று. பொறுத்துக் கொண்டுச் சமாளித்தார்கள்.
சமூகத்தில் தீமைக்கு அடங்கிப்போவது, தீமையை ஏற்பது என்பது பூமியால் இயலாத காரியம். தீமைகளையும் அநீதிகளையும் ஏற்று அடங்கி நூறு வருஷம் வசதியாக வாழ்வதை விட அவற்றை எதிர்த்தழிக்கும் முனைப்புடன் நிமிர்ந்து நின்று. போராடிப் பத்து நாட்களில் அழிந்தால் கூட அழியலாம் என்கிற அளவு சுயமரியாதையும், சுதந்தர உணர்வும் அவனுக்கு இயல்பாகவே உண்டு.
‘மன்னாரு'-- என்று அப்பகுதி மக்கள் பயத்துடனும் பதற்றத்துடனும் தணிந்த குரலில் சொல்லிய அந்தப் பேட்டை ரவுடியின் முழுப் பெயர் மன்னார்சாமி. ஒரு தடவை சட்டசபை உறுப்பினராகவும், மூன்று தடவை கார்ப்பொரேஷன் கவுன்ஸிலராகவும் இருந்த அவன் ஆளுங் கட்சிகள் எவையாக இருந்தாலும் அவற்றுக்கு உடனே வேண்டியவனாகிவிடுவது வழக்கம்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனைச் சந்திக்கும் நோக்குடன் புறப்பட்டான் பூமி. எங்கே எதற்காகப் போகிறேன் என்று