பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாயங்கால மேகங்கள்
199
 

யார் யாரோ வந்தார்கள். பார்த்தார்கள். போனார்கள். ஒரு தினுசான பெண்களின் நடமாட்டம் அதிகமாயிருந்தது. கூச்ச நாச்சமின்றி அவர்கள் அங்கு நடமாடினார்கள், உடலால் மட்டுமே தாங்கள் பெண்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்களே ஒழிய, பெண்மையின் உயரிய உணர்வுகள் எவையும் மருந்துக்குக் கூட அவர்களிடம் தென்படவில்லை. மறுபடியும் எழுந்திருந்து போய் வரவேற்புப் பெண்மணியிடம் தான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பூமி கேட்டான்.

“நீங்கள் விரும்புகிற வரை காத்திருக்கலாம்” என்றாள் அவள்.

“இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?”

“அர்த்தம் எல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை ... இங்கே வருகிறவர்கள் எல்லாம் அர்த்தமும் புரிந்துதான் வருகிறார்கள். நாங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் எதையும் தெரிந்து கொள்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை, நீங்கள்தான் புரியாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.” பூமி சிந்தித்தான். குழப்பமாயிருந்தது. அவள் தன்னையும் அங்கு வருகிற வாடிக்கைக்காரனாக நினைத்து நடத்து கிறாளோ என்று தோன்றியது. மறுபடியும் அவளிடம் நினைவூட்டினான் பூமி.

“நான் மன்னாருவைப் பார்க்க வந்தேன்...”

மறுபடியும் அவள் முகம் வியப்பைப் பொழிந்தது. இண்டர்காமில் உள்ளே யாருடனோ தொடர்பு கொண்டாள். பின்பு அவனிடம் பேசாமல் அங்கே நின்ற அந்தப் புண்ணாக்குத் தடியர்களிடம் நேரே பேசினாள். அவள்:

“இந்த ஆளை உள்ளார இட்டுக்கினு போங்கப்பா! தலைவரு வரச்சொல்றாரு.”

வார்த்தைகளில் மரியாதை விரைந்து தேய்மானம் பெற்றிருந்தது. பூமி அதைக் கவனித்துக் கொண்டான். ஆனால்