உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

211

சித்ராவைக் கூப்பிட்டு அன்று முழுவதும் பொறுப்பாக கேஷ் டேபிளைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியே கிளம்பத் தயாரான பூமியைத் தடுத்து “நீங்கள் தனியாகத்தான் அலைய வேண்டுமா? யாரையாவது துணைக்குக் கூட அழைத்துக் கொள்ளுங்கள். அல்லது போலீசில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டுப் புறப்படுங்களேன்” என்றாள் அவள்.

“முதலில் நாமே போலீசில் புகார் செய்து விட்டால் அப்புறம் பையனை உயிரோடு பார்க்க முடியாமல் செய்து விடுவார்கள். மன்னாரு கும்பல் கொலை பாதகத்திற்கு அஞ்சாதது.”

“அதற்காக நீங்கள் தனியாகப் போய்ச் சிக்கிக்கொள்ள வேண்டுமா?”

“சிக்கிக்கொள்கிற ஆள் நான் இல்லை.”

“உங்களிடம் வித்தை கற்கும் பையன்களில் யாராவது நாலு பேரை வரவழைத்து எல்லாருமாகச் சேர்ந்து தேடலாமே?”

சித்ராவும் பூமியும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, காணாமல் போன பையனின் தாயே அங்கு வந்து விட்டாள். சற்று முன் பூமியும் சித்ராவும் அவளை வீடு தேடிச் சென்று அவளுக்குத் தைரியம் கூறிவிட்டு வந்திருந்தும் அதில் அமைதி யடையாமல் மனம் பதறி என்னவோ ஏதோ என்று மெஸ்ஸுக்குத் தேடி வந்திருந்தாள் அவள்.

“அவன்பாட்டுக்குப் பழையபடியே இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லாமே இருந்துக்கிட்டிருப்பான். திருந்தி வழிக்குக்கொண்டாரேன் பேர்வழியேன்னு இப்பிடி. அவனை வம்பிலே மாட்டி வச்சிட்டீங்களே! நான் இப்ப எங்கே போவேன்? எப்பிடித் தேடுவேன்?” என்று அந்தத் தாய் உணர்ச்சிவசப்பட்டுப் புலம்பியபோது அவளுக்கு என்ன பதில் ‘சொல்வதென்று தெரியாமல் பூமி திகைத்தான்.