அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அதிக அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவர்களையும் சகித்துக்கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.
குடிசை வாசியான அந்த ஆட்டோ டிரைவரின் மனைவிப் பொய் சொல்லுகிறாள் என்று பூமிக்குத் தெளிவாகப் புரிந்தது. உள்ளே ஒளிந்திருக்கும் அவளுடைய கணவனே அவளை பொய் சொல்லத் தூண்டியிருக்கிறான் என்பதும் அனுமானத்தில் புலப்படக் கூடிய எல்லையில் இருந்தது.
யாருக்கோ கூலிப்பட்டாளமாக மாறிக் குருவையே தாக்க முயன்றுவிட்டுக் கூசி, ஓடிய வெட்கம் காரணமாகவே அவன் தன்னை இப்போது காண நாணுகிறான் என்று பூமிக்குத் தோன்றியது.
குடிசை வாசலில் அவனை வழிமறிப்பது போல் நின்ற அந்தப் பெண்ணே எதிர்பாராதபடி, “டேய் மணி! வாடா வெளியிலே” என்று அவன் பேரைச் சொல்லி இரைந்து கூப்பிட்டபடி, உள்ளே நுழைய முயன்ற பூமியைத் தடுக்க முடியாமல் விலகி வழிவிட்டு விட்டாள் அவள்.
பூமி உள்ளே புகுந்து மின்வெட்டு நேரத்தில் ஒளிந்திருந்த அவனை வெளியே இழுத்து வந்து விட்டான்.
மணியோ பயந்து பதறிப் போய், “நான் சும்மா அந்தக் கும்பலோட வந்தேன், உங்களோட எனக்கு ஒண்ணும் விரோதமில்லே. என்னைத் தப்பா நெனைக்காதீங்க” என்று பூமியிடம்