உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

சாயங்கால மேகங்கள்

ஹோட்டல் நடத்தறதை விடச் சித்திரைத் திருவிழாவிலே ஓசித் தண்ணீர் பந்தல் வைச்சு நடத்தலாம். தர்மமாவது மிஞ்சும்” என்று எல்லாரையும் வைத்துக் கொண்டே எல்லாத முன்னிலையிலும் சித்ராவிடம் வந்து இரைந்தாள்.

இதற்கு உடனே பதில் சொல்லி. முத்தக்காளிடம் சண்டையை வளர்ப்பதற்குச் சித்ரா விரும்பவில்லை. அதனால் மௌனம் சாதித்தாள். மறுபடியும் முத்தக்காள் அதே விஷயத்தை விசாரிக்கவே ஒரு சர்வரைக் கூப்பிட்டு அவனிடம் தணிந்த குரலில் விஷயத்தை விளக்கி அவனைக் கொண்டே முத்தக்காளுக்கும் பதில் சொல்ல வைத்தாள் சித்ரா.

சண்டையைத் தவிர்ப்பதற்காகவே சித்ரா இந்த உத்தியை மேற் கொண்டிருந்தாள். ஆனால் இதுவே சண்டையை வளர்க்கக் காரணமாகிவிட்டது.

“என்னன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க? என் ஹோட்டல்லேயே வந்து கல்லாப் பெட்டியிலே கால் மேலே கால் போட்டு உட்கார்ந்துக்கிட்டு, என் வார்த்தையை மதிச்சுப் பதில் பேசறதில்லே... இதெல்லாம் பொறுத்துக்கணும்னு என் தலையிலே எழுதலே” என்று சித்ராவுக்கு முன்னால் வந்து இரையத் தொடங்கி விட்டாள் முத்தக்காள்.

சித்ரா அதற்கும் பதில் சொல்லவில்லை. உணர்ச்சி வசப்பட்டு விடாமல் பொறுமையாக இருந்தாள். அவள் பதில் பேசாமல் இருக்கும் நிலைமையையும் அப்படியே தொடர் முடியாமல் முத்தக்காள் தொடர்ந்து இரைய ஆரம்பித்தாள். ஓரளவு சாதாரண எல்லையைக் கடந்து பூமி, சித்ரா இருவரும் தங்களுக்குள் பழகும் விதத்தையே ஏளனமாகக் குறிக்கும் எல்லைவரை நீண்டது. முத்தக்காளின் பேச்சு.

பூமி விரைவில் திரும்பி வந்து விடுவான் என்று எதிர்பார்த்த சித்ராவுக்குப் பெரிதும் ஏமாற்றமாக இருந்தது.