பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

சாயங்கால மேகங்கள்

அது நடந்திருந்தது. சித்ராவும் அதை மறுக்கவோ தவிர்க்கவோ இல்லை.

கைப்பிடியில் வளைகள் இடறியதால் திடீரென்று சுதாரித்துக் கொண்டபூமி, “ஐ யாம் ஸாரி சித்ரா! ஏதோ நினைப்பில்” என்று தன் கையை விடுவித்துக் கொண்டபோதுதான் சித்ராவுக்கு வருத்தமாக இருந்தது.

அவன் ‘ஸாரி’ சொன்னதும் கையை விடுவித்துக் கொண்டதும்தான் அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு விநாடி திரும்பிப் பார்த்தபோது முத்தக்காள் மெஸ் முகப்பிலேயே நின்றபடி தாங்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருப்பதை, அவர்கள் இருவருமே கவனித்தார்கள். சித்ரா சொன்னாள்:-

“ஒரு வலுவான பாதுகாப்பை இந்த மெஸ் இழக்குதுங்கிறதைப் பற்றிய ஞாபகமே இல்லாமே அவங்க உங்களைச் சுலபமா இழந்துட்டாங்க.”

“பிறருக்காகக் கஷ்டப்படலாம், உழைக்கலாம், உதவலாம். அவமானப்பட முடியாது. அதுவும் அந்தப் பிறராலேயே தொடர்ந்து அவமானப்படுவது என்பது பொறுத்துக் கொள்ளக் கூடியதில்லை. எதற்கும் ஓர் எல்லை உண்டு சித்ரா.”

“அவங்க உங்களை அவமானப்படுத்தலே. இப்படி நடந்துக்கிறதன் மூலம் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கிறாங்கன்னுதான் நான் சொல்லுவேன்.”

“எப்படியானாலும் சரி, இனிமேல் நானாக அங்கே போகப் போறதில்லே !”

“இதை எல்லாம் பாத்தா நாட்டிலே விதவை மறு மணத்தைத் தீவிரமா ஆதரிக்கணும்னு தோன்றுகிறது. சின்ன வயசிலே வாழ்க்கையை இழக்கிற பல பெண்கள் இப்பிடித்தான் வக்கரித்துப் போயிடறாங்க”...