பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

89

மும் அதை அங்கே நடத்த விடுவார்களோ என்று தயங்கும் அளவிற்கு அவளை அச்சுறுத்திவிட்டுப் போயிருந்தார்கள் கலகக்காரர்கள். அதனால்தான் அவளுடைய ஆற்றாமையும் கோபமும் கலந்த மன நிலையில் ‘இவ்வளவிற்கும் காரணம் பூமிதானே?’ என்று ஆத்திரம் ஏற்பட்டிருந்தது. பூமியும் சித்ராவும் தன்னைப் பார்க்க இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்தபோது கூட அவள் ஆத்திரத்தோடும் மனத்தாங்கலோடும்தான் அவர்களை எதிர்க் கொண்டாள்.

இப்போது அப்படி முன்பு நடந்து கொண்டதற்காக முத்தக்காளே உள்ளூர வருந்தினாள். பூமி அசுர சாதனை செய்து மெஸ்ஸை மறுபடி உயிர்ப்பித்திருந்தான். உண்மையில் அது அசுர சாதனையாகத்தான் தோன்றியது முத்தக்காளுக்கு. தானோ வேறு யாராவது தனக்கு வேண்டியவர்களோ முயன்றிருந்தால் கூட இவ்வளவு விரைவில் மெஸ்ஸை நடத்த முடியுமா என்ற மலைப்பு இப்போதும் அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

மாலைவேளை முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் சித்ரா தற்செயலாக மெஸ் பக்கம் வந்தாள். அவள் வந்தபோது மெஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பின் பக்கத்து அறையில் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து படுத்திருப்பதைச் சொல்லி அவளோடு சிறிது ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்குமாறு சித்ராவை அனுப்பி வைத்தான் பூமி.சித்ரா அவன் சொன்னபடியே செய்தாள்.

நீண்டநாள் பழக்கமுள்ள வாடிக்கையாளர்களான வேறு இரண்டொரு டாக்ஸி டிரைவர்களும் முத்தக்காளைப் பார்த்துப் பேசவேண்டுமென்று பூமியிடம் கேட்டுக்கொண்டு பின்பக்கத்து அறைக்குப் போய் விசாரித்துப் பேசிவிட்டு வந்தார்கள். மற்றபடி மெஸ் விஷயமாக அவளை யாரும் போய்த் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான் பூமி. மனமும் உடலும், நொந்து போயிருக்கும் அவளுக்குத் தொந்தரவு கொடுக்க