பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

சாமந்தி-சம்பங்கி-ஓணான் இலை


இருந்து விடுவித்துக் கொண்டு இருந்தாள். சின்னான் வாழைப்பழ வண்டியை முன்னால் இழுக்க, பார்வதி அதை பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தாள். துலுக்காணமும், சாந்தியும் ராமனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். மாரியம்மாள் தனது கீரைகளைக் கிள்ளிக் கொண்டு இருந்தாள்...

திடீரென்று போலீஸ் வேன் வந்து நின்றது.

பல போலீஸ்காரர்கள் கீழே குதித்தார்கள். அப்படி குதித்தவர்களில் 'காந்தா புகழ்' ஆசாமியும் ஒருவர்! அப்போது அவர் காந்தாவைப் பார்க்கவில்லை. அவள் யாரோ, தான் யாரோ என்பது போல் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். அவரோடு வந்த இதர போலீஸ்காரர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி, கீரைகளைக் கூடையோடும், பூக்களை அதன் மேஜையோடும் வேனுக்குள் திணித்தார்கள். சின்னானின் பழ வகைகளை உள்ளே தூக்கி எறிந்தார்கள். சீனனை செருப்புப் பெட்டியோடு ஏற்றினார்கள்.

தலைமை போலீஸ்காரர் அதட்டினார்.

"இங்கே கடை போடப்புடாதுன்னு எத்தனை தடவை சொல்லியும் கேட்கல. உம்... ஏறுங்க..."

தாயம்மா பொறுக்க முடியாமல் கேட்டாள். காந்தாவின் கடைப்பக்கம் கையை நீட்டியபடியே கேட்டாள்.

"அதோ, அந்தக் கடை இருக்கே சாமி?"

"எந்தக் கடை இருந்தா உனக்கென்ன? அது கோவில் பக்கத்துலே இருக்குது; இருக்கலாம். மொதல்ல நீ வண்டிலே ஏறு சட்டமா பேசறே..."

சின்னான் காந்தாவைப் பார்த்தபடியே முனங்கினான்.

"மட்டமான ஒரு விவகாரத்துக்காக சட்டம் வந்ததை நினைச்சு தாயம்மா புலம்புது சாரே... புலம்பினாலும் தப்பாப் புலம்பல!"

"ஏண்டா சோமாறி... கயிதே... எதிர்த்தா பேசறே? உனக்கு ஆறு மாசம் வாங்கிக் கொடுக்கறேன். பார்..."