பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

153


"அல்பம்... அல்பம்.... இது சிரிச்சுப் பேசுற விஷயம் இல்லடா. அடிச்சு நொறுக்குற விவகாரம். நம்ம ஆட்டோ தொழிலுக்கே கேவலமான சமாச்சாரம். பெரியவரே!, நாங்க பாத்துக்கிறோம். அவனுக்கு நாளும் கிழமையும் இன்னைக்குத்தான் வந்திருக்கு. புறப்படுங்கடா! பயமாய் இருந்தால் நீங்க வீட்டுக்கு போங்க சார்... இனிமேல் இது எங்க சமாச்சாரம்"

அதுவரை ஆட்டோவுக்குள் முடங்கிக் கிடந்து, அங்கிருந்து எம்பிக்குதித்து ஆவேசமாய்பேசும் அந்த நடுத்தர ஆட்டோக்காரரிடம் மார்த்தாண்டம் கைகூப்பிய படியே பேசினார்.

"உங்கள பார்த்ததும் என் பயம் பஞ்சா பறந்து போய்ட்டு. அப்புறம் ஒரு விஷயம்... அந்த அற்பப் பயல இவங்க எப்படி கனிச்சுக்கனுமோ அப்படி கவனிக்கட்டும். நீயும் நானும், அந்தப் பொண்ண, அவள் வீட்டுல ஒப்படைச்சிட்டு வரணும். அதோட அந்தப்பயல ரகளை இல்லாம பக்குவமா மடக்கணும். இல்லாட்டி, அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கக் கூடாது பாருப்பா"

அந்த ஆட்டோ தலைவர் மார்த்தாண்டம் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டுகிறார். அவர் கேள்விக் குறிக்குப்பதிலாக அத்தனை பேரும் வீரப்பாய் நிற்கிறார்கள். அந்தச் சமயத்தில் -

காலி மனையில் இருந்து, அந்த ஆட்டோ தள்ளாடித்தள்ளாடி வெளிப்படுகிறது. அந்தப் பயலின் ஒரு கை, பின்புறமாய் வளைந்திருக்க, இன்னொருகை ஆட்டோவை இயக்குகிறது.

மனோபலத்திற்கு இணையாக உடல்பலம் பெற்றதைப்போல் உணர்ந்த மார்த்தாண்டம், அந்த ஆட்டோக்காரர்களுடன் இரண்டறக் கலக்கிறார். அத்தனைபேரும் அந்த ஆட்டோவை எதிர்நோக்கி, அமைதியாய் நிற்கிறார்கள். - புயலுக்கு முன் அமைதியாய்.

குமுதம் - நவம்பர், 1999