பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைராக்கிய வைரி


நெல் பிரிந்து அரிசியாகவும் உமியாகவும் மாறியதுபோல் தாயும், மகளும் தத்தம் போக்கில் ஊருக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். செல்லாத்தாவின் வலது கையில் அகத்திக்கீரைக் கட்டு இருந்தது. மகள் ராஜகுமாரியின் தலையில் ஒன்றிற்கு மேல் ஒன்றாக இரண்டு புல்கட்டுக்கள். சற்றத் தொலைவில் அம்மாவால் புல்லுக்கட்டுடன் மல்லுக் கட்ட முடியாமல் போனபோது அதையும் தானே சுமந்து கொண்டு கையில் இருந்த அகத்திக் கீரைக்கட்டை அம்மாவிடம் கொடுத்தாள். தலைச்சுமை பெரிதில்லை என்று சொல்லாமல் காட்டுவதுபோல் அனாயசமான லாகவத்துடன் ராசகுமாரி நடந்து கொண்டிருந்தாள். பெயருக்கேற்ற கம்பீரம், நனைத்து வைத்த மக்காச்சோளம் போன்ற நிறம். வயல்கிணற்றில் குளித்து விட்டு முடித்துவிடப்பட்ட கூந்தலின் பின்புறம் செருகப்பட்ட ஒற்றை ரோஜா. கருப்புக் கூந்தலுக்கும், பச்சைப் புல்லுக்கும் இடையே தோன்றிய பின்னணியில் மழைமேகத்திற்கும் மலைக்கும் இடையிடையே தோன்றிய சூரியத் தோற்றம் காட்டியது.

அல்லாடி வந்த செல்லாத்தாவும், அடிபிசகாது நடந்த ராசகுமாரியும் மந்தைப் பக்கம் வந்து சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மலையில் இருந்து விறகுக் கட்டுக்களைக் கொண்டு வந்திருந்தவர்கள் கவுண் கம்புகளில் அவற்றை வைத்துக் கொண்டு கண்விரிய நின்றார்கள். அருகே ஒருசில காய்கறி வியாபாரிகள். இன்னொரு பக்கம், 'எள்' அடிக்கப் பட்டது. மற்றொரு பக்கம் சீட்டு விளையாட்டுக் கும்பல். ஆங்காங்கே சிறுவர் - சிறுமியரின் தெல்லாங்குச்சி விளையாட்டும், கிளித்தட்டு விளையாட்டும் நடந்தபடி இருந்தன.

வாடிக்கையான இடத்தில் புல் கட்டுக்களைப் போட்டு விட்டுத் தாயும், மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இரண்டு கட்டுக்களும் நான்கு ரூபாய்க்குப் போகும். அன்றைய அடுப்பு எரியும். ராசகுமாரி வழியில் ஒரு பையன் சைக்கிளால் மோதிய கால்பாதத்தைத்