பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வைராக்கிய வைரி


மீண்டும் சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட முத்துப்பாண்டி செல்லாத்தாவின் குரல் உயர்ந்ததால் அங்கிருந்து திமிறினான். சீட்டுச் சகாகள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். 'துருப்பு' தெரிஞ்ச பிறவு அவன் போவலாமா...?

தாயும், மகளும் வாய் செத்த ஊர்த் தெருவழியாகத் தலை குனிந்த படி நடந்து குடிசைக்கு வந்தார்கள். ராசகுமாரி வீட்டுக்குள் போனவுடனேயே வேகமாக ஒடி நார்க்கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்டாள். "எய்யா... என்னப் பெத்த அய்யா ஒரு தடவ வந்து எங்களப் பாத்துட்டுப் போங்க... ஒரே ஒரு தடவ" என்று கூறியபடியே கூப்பாடு போட்டாள்.

செல்லாத்தாவுக்கு ஏதோ ஒரு வைராக்கியம், புடவையை இறுக்கிக்கட்டியபடியே வெளியே புறப்பட்டாள். அப்போது பக்கத்துக் குடிசைக்காரர் வந்தார்.

"எங்க அக்கா போறே..."

"போலீஸ் ஸ்டேஷனுக்கு. என் மகள கை தொட்டு அடிச்ச பய கையில விலங்கு மாட்டுறத நான் பாக்கணும். அவனப் போலீஸ்காரங்க நாய் மாதிரி நடுரோட்ல இழுத்துட்டுப் போறத என் மவள் கண்ணால பாக்கணும். நீயும் துணைக்கி வாரீயா..."

"சொல்றேன்னு தப்பா நினைக்காத... இங்க நடக்கிற அநியாயத்துக்காவ அங்க போறே, அங்க நடக்கிற அநியாயத்துக்கு எங்க போவே..? உன் மகள அடிச்சதுக்கு யார் சாட்சி சொல்லுவாவ? கோர்ட்டுக்குப் போவியா? புல்லு வெட்டப் போவிய? உன் மகளக் கூண்டுல நிறுத்தி வக்கீல் பச்ச பச்சயா கேப்பான். அந்தச் சின்னஞ் சிறிசால தாங்க முடியுமா...?"

செல்லாத்தா, மருவினாள். மருவி மருவி கருவிக்கொண்டே கேட்டாள்.

"அப்படீன்னா அடிச்சவன் கையில விலங்கு போட முடியாதா?”

"உன் கைக்கு விலங்கு போடாம இருந்தால் சரி...! முத்துப் பாண்டி அடிச்சதுனால கை வலிக்குன்னு உன்கிட்ட நஷ்ட ஈடு கேக்காம இருந்தா சரி! பேசாம நாலு பெரிய மனுஷங்கன்னு இருக்கவங்ககிட்ட நியாயம் கேளு..."