பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

29


சம்பந்தம் திகைத்தபோது, டாக்டர் நிதானமாகப் பேசினார்.

"அந்தச் சேபாவுல உட்காருங்க. இதோ வர்றேன்..."

"எனக்கு வயிற்று வலி டாக்டர்."

"எந்த வலியோ... பார்த்துடலாம்... மொதல்ல உட்காருங்க..."

சம்பந்தம், தயங்கியபடியே டாக்டரைப் பார்த்தார். அந்த முகத்தில் தோன்றிய அன்புப் பிரவாகத்திற்குக் கட்டுப்பட்டோ என்னவோ, மெள்ள நடந்து, சிறிது நின்று, டாக்டர் மீது வைத்த கண்களை விலக்காமலேயே சோபா ஸெட்டில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் டாக்டரும் வந்தார். சம்பந்தம் உட்கார்ந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தார். கரத்தை நீட்டி, சம்பந்தத்தின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.

"நான் சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ரகுராமன்... நீங்க..."

"எனக்கு எதுவும் இல்லை. டாக்டர் ஏதோ தெரியாத்தனமாய்..."

"பல காரியங்களைத் தெரியாத்தனமாய்த்தான் செய்கிறோம். காரணம். ஏராளம்... ஏன்... செய்கிறோமுன்னு நம்மை நாமே கேட்டால், தெரியாத காரியங்களுக்கான காரணங்கள் தெரிந்து விடும். போகட்டும்... ஏன் ஒரே டென்ஷனாய் இருக்கீங்க... எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. சும்மாச் சொல்லுங்க... மனசுக்குள்ளே என்ன செய்யுது?"

சம்பந்தம், டாக்டரையே வெறித்துப் பார்த்தார். வேதனையோடு பார்த்தார். அவரைப் பார்ப்பதுபோல் தன்னைத்தானே, தனக்குத்தானே... பார்த்துக் கொண்டார். திரைப்படச் சுருள்போல், மூளையில் உணர்வுகளாகச் சேகரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மனத்திரையில் பிம்பங்களாயின. வேக வேகமாகவும், மெல்ல மெல்லவும், முன்னாலும் பின்னாலுமாகவும் வந்தன. ஓடின, நிழலாடின. ஏழு வயதில் அம்மாவைப் பறி கொடுத்தது. எட்டு வயதில் சின்னம்மா வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த மூன்று மாத காலத்திற்குள்ளேயே தலையில் குட்டத் துவங்கியது. தந்தையையும் குட்ட வைத்தது. வயிற்றைக் காயப் போட்டது. ஊராரிடம் தான் ஒரு ஊதாரிப் பிள்ளை