பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

39


சுயமாய் நின்றான். நிலைமை 'கட்டுக்கு' மீறிப் போவதை புரிந்து கொண்டு, கடற்கரைப் பாண்டியை அதட்டினான்.

'யோவ்... இதுக்கு மேல... ஒனக்கு மரியாதி இல்ல... மொதல்ல எதைக் கேட்டாலும், முறையாய்க் கேட்க தெரிஞ்சிக்கணும்?

வேதமுத்து, கடற்கரைப் பாண்டியை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக, நெருங்கிப் போனான். ஆனால், அவரோ, அவனைப் பார்ப்பதற்கு முகத்தைகூட நிமிர்த்தவில்லை. எவனோ ஒருத்தன் எதிரில் நிற்கிறான் என்ற அனுமானத்துடன் கத்தினார்.

'என்னய்யா... மொறையக் கண்ட.. பொல்லாத மொறைய மொதல்ல என்ன விஷயம்னு கேளு... அதுதான் முறை... மூணு மாசத்துக்கு முன்னால... இங்கே ஒருத்தன் இருந்தானே... சூட்டும் கோட்டுமாய்... சொட்டத் தலையன்... ஆபீஸராம் ஆபீஸ்ரு... இவனுவல்லாம் ஆபீஸரானதால்தான் இப்போ இந்தியாவே நாறுது, அவனும், இந்த பொண்ணும் எங்க பர்னிச்சர் கடைக்கு ஜீப்புல வந்தாங்க... இந்த நாற்காலி வேணுமுன்னாங்க. இதை மூவாயிரத்தி முன்னுறு ரூபாய்க்கு பேசி முடித்து அங்கேயே அசோக முத்திரத் தாளுல ஆர்டர் கொடுத்தாங்க 'கிரிடிட் பில்' தந்திங்கன்னா... அதை ஹெட் ஆபீசுக்கு அனுப்பி அங்கே இருந்து செக் வந்து... அதை மாத்துறத்துக்கு நாளாகும்... அதனால கேஷ் பில்லா கொடுங்க... ஒரு வாரத்துல பணம் வந்துடுமுன்னு சொன்னாங்க... நானும்... அந்த ஜீப்பையும்... அதுல வந்த மூஞ்சிகளையும் பார்த்து நம்பிட்டேன். மூணு மாசமாயிட்டது... இன்னும் பணம் வந்தபாடில்ல. வரும் என்கிறதுக்கு அத்தாட்சியும் இல்ல... சீவி சிங்காரிக்க தெரியுது... சொன்ன வாக்கை காப்பாற்ற தெரியல்ல... தூ...."

எல்லோரும் சும்மா நின்றபோது, கடற்கரைப் பாண்டியிடமும் ஒரு நியாயம் இரப்பதை புரிந்துகொண்ட வேதமுத்து, இப்போது இதமாகப் பேசினான்.

'பெரியவரே உங்களுக்கு மனசு சரியில்ல. இன்னிக்கு போயிட்டு நாளைக்கு வாங்க... பேசிக்கலாம்...'

ஒனக்கு ராமபிரான்னு நெனப்போ... என் நிலம ஒனக்கு தெரியுமாய்யா? ஒங்கள மாதிரி நான் சர்க்கார் மாப்பிள்ளை இல்லய்யா...