பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஒருவழிப் பாதை


ஊழியர்கள் மெளனமாக நடந்தார்கள். நடந்ததை சிங்காரத்திடம் சொன்னார்கள்-அவன் கத்துவான் என்று எதிர்பார்த்து. அவன் கத்தாததால் இவர்கள் கத்தினார்கள்.

"சிங்க்! எப்படிடா உன்னால கோபப்படாம இருக்க முடியுது?"

"சேல்ஸ் மானேஜர் ஆசையை எதுக்குப்பா கெடுக்கணும்?"

அக்கெளண்டண்ட் தான் 'பெருந்தன்மையானவன்' என்பதைக் காட்டிக் கொண்டதில் பெருமிதப் பட்டான். இதுபோல், சேல்ஸ் மானேஜரும், நாடகத்தை, சிங்காரம் 'டைரக்ட்' செய்ய 'பெருந்தன்மையோடு' சம்மதித்தான்.

ஒத்திகைகள் நடந்தன. இறுதி ஒத்திகையைப் பார்க்க சேல்ஸ் மானேஜர் சதாசிவம் வந்திருந்தான். இரண்டு மூன்று காட்சிகளைப் பார்த்தான். முதல் காட்சியில் அவன் எழுதியதே இல்லை. இரண்டாவதில், பல மாறங்கள். மூன்றாவது, முழுசாய் இன்னொன்று. சதாசிவத்தால், கத்தாமல் இருக்க முடியவில்லை.

"நிறுத்துங்க. இந்த நாடகத்தை நான் அனுமதிக்க முடியாது. என் ஸ்கிரிப்டை திருத்த எவனுக்கும் உரிமை கிடையாது."

அக்கெளண்டண்டும், நாடக டைரக்டருமான சிங்காரமும் விடுவானா? விடவில்லை.

"சொல்லுங்களேண்டா... ஸ்கிரிப்டை திருத்த டைரக்டருக்கு உரிமை உண்டு."

"அதுக்காக எல்லா காட்சியிலேயும் கை வைக்கிறதா?"

"எல்லாக்காட்சியும் மட்டமாக இருந்தால் என்ன பண்றது?"

"என் ஸ்கிரிப்டா மட்டம். நான்சென்ஸ், டைரக்‌ஷன்தான் மகாமட்டம்"

"என் டைரக்‌ஷனா? இடியாட்டிக்... மட்டமான ஸ்கிரிப்டையும் வைத்து சிறந்த நாடகம் தயாரிக்க முடியும் என்கிறதுக்கு என் டைரக்‌ஷன் ஒரு உதாரணம்".