பக்கம்:சிதறல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

'வெறுத்தால் பெண் பேயாவாள்
வழிபட்டால் அவள் தெய்வமாவாள்
மதித்தால் பெண்ணாவாள்'

என்று முதற் கவிதைப் புத்தகமாக வாங்கினேனே அதில் எழுதி இருந்தது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தது. ஆரம்பத்தில் அவர் என்னை வழிபட்டார்: நான் தெய்வமாக இருந்தேன். இப்பொழுது அவர் என்னை வெறுக்கிறார். நான் பேயானேன்; அவர் மதித்தால் பெண்ணாவேன்; நான் பேயாகவும் விரும்பவில்லை; தெய்வமாகவும் ஆக விரும்பவில்லை. பெண்ணாக வாழ்ந்தால் போதும்.

அடிக்கடி என் பழைய ஆசிரியை நண்பர் ஆஷா வந்து ஆறுதல் சொல்வாள். அவள் தமிழ்ப் பேரறிஞர் ஒருவர் எழுதிய நாவல்கள் நன்கு படித்தவள். குடும்பப் பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவள். அவள் வீட்டில் அந்த நாவல்களை நன்றாக அட்டைபோட்டு அடுக்கி வைத்திருக்கிறாள். 'நெஞ்சில் ஒரு முள்' அவளுக்குப் பிடித்து இருந்தது. அவள் வாழ்வில் ஒரு முள் தைத்து இருந்தது. அந்த வேதனையை அவள் மறக்க முயன்றும் அவளால் முடியவில்லை. அந்த முள்ளை எடுத்துப்போட முயன்றாள். அதுபோக மறுத்துவிட்டது. ரத்தம் கசிந்துகொண்டே இருந்தது. அவள் மனச்சான்று அவளை உறுத்தவில்லை. அதை அவள் பெரிதாக நினைக்கவில்லை. அவளும் உலகம் அறிந்த பெண் தான். மறுபடியும் அவன் வந்து தொல்லைபடுத்தினான். வேறு வழியில்லை.

கணவனிடம் உண்மையைச் சொல்லிவிட்டாள். அதற்கு அப்புறம் அவள் பாரம் குறைந்துவிட்டது என்று நினைத்துவிட்டாள். ஆனால் குறையவில்லை. அவள் கணவன் அவளை மதிக்கவில்லை. தற்காப்புக்காக அந்த உண்மையைச் சொல்லிவிட்டாள். நெஞ்சில் இருந்த முள் நீக்கப்பட்டது. அதுவே ஒரு வேலியாக அமைந்து விட்டது.சி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/42&oldid=1280452" இலிருந்து மீள்விக்கப்பட்டது