பக்கம்:சிதறல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அந்த நிலையில் அவர்கள் உள்ளம் மலர்ச்சி பெற வில்லை. ஒருவரை ஒருவர் ஆக்கிரமித்துக் கொள்ள விரும்பினாகள். "அவள் என் உடைமை" என்ற எண்ணம் ஆடவர்களுக்கு அமைந்து விடுகிறது. அதைவிட பெண்ணுக்குத்தாம் உறவு நெருங்கி அமைகிறது. குழந்தையால் பிணைப்பும் உண்டாகிறது; பிளவும் ஏற்படுகிறது. இது என் வாழ்வில் கண்ட உண்மை; குழந்தை இன்மையால் வேற்றுமையும் உண்டாகிறது, ஆனால் அதே சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் இன்றியமையாதவர் ஆகியும் விடுகின்றனர். இது அவள் வாழ்க்கை.

அவளுக்கு ரவி என்றால் உயிர். அவள் என்னைப் பார்க்க வருகிறாள் என்பதை விட அவனைப் பார்க்க விரும்புகிறாள் என்பது தான் உண்மை. அவனை எடுத்துக் கொஞ்சும்போதெல்லாம் அவள் ஏக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

அவள் சேலையைத் திடீர் என்று நனைத்து விடுவான். அதற்காக அவள் கவலைப்பட்டதே இல்லை. அவள் தாயாக வில்லை. அவன் அவளுக்குத் தாய்மையைத் தந்தான். குழந்தை பெற்றுத் தான் தாய், ஆகவேண்டும் என்பது இல்லை. அதை எடுத்து வளர்ப்பதாலேயே தாய்மையைப் பெற முடியும் என்பதை அவளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

"உனக்குக் குழந்தை இல்லை என்று ஏன் வருந்துவதில்லையா?" என்று வாய் தவறிக் கேட்டு விட்டேன்.

"நான் என் கணவனையும் இழக்கத் தயார். ஆனால் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும்" என்றாள்.

எப்படி அவள் குழந்தையை மதிக்கிறாள் என்பதை அந்தச் சொற்கள் உணர்த்திவிட்டன. ‘பெண்’ யார்? அவள் உள்ளம் எது என்பதை அவள் சொற்கள் உணர்த்தின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/63&oldid=1288601" இலிருந்து மீள்விக்கப்பட்டது