பக்கம்:சிதறல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நாட்டு வாழ்த்துப் பாட்டுக்கு நான்தான் கிடைத்தேன் மற்றொருத்தி என் சிநேகிதி. அவளும் என்னோடு சேர்ந்து பாடுவாள். அவளுக்கு சினிமாப்பாட்டு ராகம் தான் வரும். எனக்குக் கொஞ்சம் பழைய ராகம் வரும். இரண்டு பேருக்கும் ஒத்து வருவதே இல்லை. எப்படியோ பாடி முடித்து விடுவோம்.

அந்தக் கூட்டங்களுக்கு நான் அதற்காகவே ஒரு வெள்ளைப் புடவை உடுத்திச் செல்வேன். பின்னால் ஒற்றை ரோஜாப்பூ வைத்துக் கொள்வேன். உண்மையான பூ எங்கே கிடைக்கிறது ? சில சமயம் பிளாஸ்டிக் பூவும் வைத்துக் கொள்வது உண்டு.

என்னை 'பிளாஸ்டிக்' பூ என்று தூர இருந்து கிண்டல் செய்வதையும் கேட்டு இருக்கிறேன். 'காகிதப் பூக்கள்' என்ற கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. காமராசன் எழுதிய கவிதை அது. அலிகளைப்பற்றி அவர் எழுதியிருந்தார். அதைப் படித்த பிறகுதான் இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைப்பது உண்டு. அவர்களுக்கு உடல் இன்பம் அடைய முடியாத நிலை: பெண்ணாகவும் வாழ முடியாது. ஆண்மையும் கிடையாது. சுகத்தை இழந்த ஒரு கூட்டம் அது. அதைப்போல் அவர் ஒரு கவிதை பாடியிருக்கிறாரே என்று நினைக்கும்பொழுது அந்தக் கவிஞரைப் பாராட்டாமல் இருக்க முடிவது இல்லை.

நான் என் உடன் மாணவிகளுக்கு வெறும் 'பிளாஸ்டிக் பூ'வாகத்தான் விளங்கினேன்; கவர்ச்சி இருந்தது. ஆனால் மணம் வீசவில்லை. அவர்களுக்கு என்னைப் பார்க்க இடம் தந்தேன். என்னை மணக்க யாரும் முயலவில்லை. அந்த எண்ணம் எனக்கும் வந்தது இல்லை. யாருக்கும் எழுந்தது இல்லை. அழகுள்ள பொருள் நான்: அப்படி நினைக்கிறேன்; அப்படி மற்றவர்கள் என்னை நினைக்க வைக்கிறார்கள். நினைக்க வைத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/67&oldid=1288611" இலிருந்து மீள்விக்கப்பட்டது