பக்கம்:சிதறல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

நான் படிக்கிற காலத்தில் கதை கட்டுகிறவர்களும் இல்லாமல் இல்லை. ஒரு ஆசிரியர் ரொம்பவும் இசையோடு பாடுவார், அவரோடு நெருங்கிப் பழகுவேன். ஏன்? சில இராகங்களைப் பழகிக்கொள்ள. அவர் ஒரு தேர்வாளராக இருந்து விட்டார். அவ்வளவுதான். நான் அவரை மதிப்பெண் பெறத்தான் சுற்றி வருகிறேன் என்று பேசியவர்களும் இருந்தார்கள். ஆசிரியர்களோடு நெருங்கிப் பழக முடிவது இல்லை. ஏன் இந்த மாதிரி ஒரு சிலர் பேச வாய்ப்பு ஏற்படுவதால். அது மட்டும் இல்லை. ஆசிரியர்கள் ஒழுங்காக நடந்து கொள்வது இல்லை என்று ஒரு சிலர் கதை கட்டி விடுகிறார்கள். அதை நான் நம்புவதில்லை.

நான் நம்புகிறேனோ இல்லையோ, சிலரைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன். ஒரு பேராசிரியர் தன் மாணவியை வம்புக்கு இழுத்தாராம். அதைப்பற்றயே ரகசியமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். பாவம் அவர்களும் அதிகமாகப் பேசுவது இல்லை. இவ்வாறு பிறர் குறைகளை எடுத்துப் பேசுவதே அநாகரிகம் என்பதை உணர்ந்து வந்தார்கள்.

நான் பழகிய ஆசிரியர்கள் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களுள் ஒருவர். என்னைப் பார்த்து அடிக்கடி கேள்விகள் கேட்பார். அவர் என்னிடத்தில் பேச வேண்டும் என்ற ஆசையை இப்படிக் கேள்விகள் கேட்டுத் தீர்த்துக் கொண்டார். உட்கார்ந்து கொண்டு இருக்கிற என்னை எழுப்பி என் வாயைக் கிளறுவதில் அவர் ஒரு தனி ரசனையைக் கண்டார். நான் அதிகம் பேச விரும்புவதில்லை. தெரியாது என்று ஒரு சொல்லில் பேசி முடித்து விடுவேன். அதுதான் அவருக்குத் தரும் பதிலாக இருந்தது. அவருக்கு வேறு எப்படி நான் பதில் சொல்லமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/66&oldid=1288609" இலிருந்து மீள்விக்கப்பட்டது