பக்கம்:சிதறல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இல்லை. என் சாயல் எங்காவது கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கக்கூடாதா என்று துருவித்துருவிப் பார்த்தேன். அவன் உருவில் என் சாயல் இல்லை; அவன் கருவில் என் சாயல் படிந்தது. அவ்வளவுதான்.அவன் சிரிக்கும்பொழுது நான் சிரிப்பேன். நான் சிரிக்கக் கற்றுக்கொண்டதே அவனிடம்தான், “நீ என் தங்கம்” என்று அவனை முகத்தோடு முகம் சேர்த்துக் கட்டி முத்தம் இடுவேன். அந்த மோன நிலை மிகவும் அழகாக இருக்கும்.

அவன் தான் இந்தக் கதைக்கு ஹீரோ. அவன் எதிர்காலத்தில் ஹீரோவாக இருப்பானோ ஜீரோவாக மாறுவானோ அது தெரியவில்லை. இப்பொழுது அவன் ஜீரோதான் இனி மேல் தான் அவன் ஹீரோவாக மாறவேண்டும்.

பாட்டிக்கு அவன் மீது உயிர்: அவனை விட்டு அவளால் பிரிந்து இருக்க முடியாது. என்னமோ கதை எழுதுகிறவர்கள் ஒரு பிரிவைத்தான் வருணிக்கிறார்கள். இது எனக்குப் பாலையாகத்தான் தெரிகிறது. இந்தச்சின்ன பிரிவையும் பாட்டியால் தாங்க முடியாது. எங்கே அவன் எங்காவது தெருவுக்குப் போய் விடுகிறான் என்று கத்துவாள்.

ஏன் எனக்கே அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. பேசாமல் தெருப்பக்கம் போய்விட்டான். யாரும் கவனிக்கவில்லை. நான் இந்த உலகத்தை மறந்து ‘குருதிப்புனல்’ என்னும் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அது வெண்மணி' தீப் பந்தம் குறித்த நிகழ்ச்சி; அதிலே இருந்தவர்கள் அத்தனை பேரும் நெருப்புக்கு இரையாகிவிட்டார்கள். அவர்கள் கரிந்து சாம்பலாகி இருக்க வேண்டும்; அல்லது அவர்கள் குருதி உறைந்து கட்டிப்போய் இருக்க வேண்டும்.அது எப்படி நீரோடு சேர்ந்து குருதிப்புனல் ஆயிற்று என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/7&oldid=1255583" இலிருந்து மீள்விக்கப்பட்டது