பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

ஒன்று, அறிவோடு வாழ்கிற வாழ்க்கை; மற்றொன்று பழக்கத்தினாலே வாழ்கிற வாழ்க்கை. புதியவற்றைக் கண்டுபிடிப்பதும், பற்பல சாதனைகளைச் செய்வதும் பலருக்குப் பயன்பட்டு வாழ்வதும், புகழ்பெற்று வாழ்வதும் தான் அறிவோடு வாழ்கிற வாழ்க்கையாகும். மற்றவை. எல்லாம் பழக்கத்தினால் வாழ்கிற வாழ்க்கையாகும்.

பிறப்பதும் வளர்வதும், உண்டு உறங்குவதும், உடுத்திக் கொள்வதும் படிப்பதும் மணப்பதும், குழந்தை குட்டிகள் 'பெறுவதும் வயதாகி மறைவதும் பழக்கத்தினாலேயே வாழ்கின்ற வாழ்க்கைகளாகும்.

பழக்கமேயாகும்

நம் வீட்டினில் உள்ள பசுமாடு ஒன்றினைக் காலையில் அவிழ்த்துவிடுகிறோம். அது எங்கெங்கோ போய் மேய்ந்து விட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு நம் வீட்டிற்குள் வந்து நுழைகின்றது. அவிழ்த்துவிட்ட உடனே வெளியில் போவதும், இந்த இந்தத் தெருக்களின் வழியாகப் போய், இந்த இந்த இடத்தில் மேய்ந்து விட்டு, இந்த இடத்தில் தண்ணீர் குடித்து விட்டு, மீண்டும் அந்தந்தத் தெருக்களின் வழியாக வீட்டிற்குப் போய்ச் சேரவேண்டும் என்று அறிவோடு தெரிந்துகொண்டுதானா அந்த மாடு வாழ்க்கை நடத்துகிறது?. இல்லையே! அது நடத்துகிற வாழ்க்கை பழக்கத்தினால் நடைபெறுகிற வாழ்க்கையாகும்.

இம்மாதிரியான வாழ்க்கை நடத்துவதற்குச் சிந்தனையோ, அறிவோ தேவையில்லை. பலர் இதுமாதிரி அவிழ்த்து விட்ட பசுவைப் போலவே. பழக்கத்தினாலேயே பல வேலைகளைச் செய்துவிட்டு வாழ்க்கை . நடத்துவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட மக்கள் நிறைந்திருக்கிற நாட்டில் முன்னேற்றத்தைக் காணவே முடியாது.