பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

'அறத்தான் வருவதே இன்பம்' என்று கூறினார். வள்ளுவர் நல்ல நெறியிலே, நல்ல வாழ்க்கையிலே ஒருவன் அடைகின்ற இன்பம் இருக்கிறதே, அது தான் எப்போதும் நிலைத்து நிற்கிற ஒரு பேரின்பம் போல நமக்குப் பயன்படும். அதை விட்டுவிட்டு, கண்ணாலேயும், காதாலேயும், மூக்கினாலேயும் வருகின்ற மிகச் சிறிய இன்பங்களெல்லாம் இன்பங்களென்றே நினைக்கக் கூடாது.

ஓரிரு இடத்திலே திருவள்ளுவர், 'குழந்தைகளைப் பெற்று அவர்கள் அந்த மழலைச் சொல் பேசுகிறார்களே, அதைக் கேட்கிறபோது வருகிற இன்பம் இருக்கிறதே அந்த இன்பம் எதற்கும் இணையில்லை' என்று சொல்லுகிறார். அதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் 'குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்பது அந்தக் குறட்பா.

மழலைச் சொற்கள்

குழந்தைகள் மழலைச் சொற்களைப் பேசுகிறபோது அறையும் குறையுமாகச் சொற்களைப் பேசுகிறபோது ... பெற்றவர்கள் தம்காதுகளால் அதைக் கேட்கும்போது தரக் கூடிய இன்பம் மிகப் பெரியது. குழந்தைகள் பேசுகிற சொற்கள் விளங்கவில்லையே என்று எவரும் வருத்தப்பட மாட்டார்கள். மழலைச் சொற்களிலே அவ்வளவு இனிமையுண்டு. அந்த மழலைச் சொற்களின் இனிமையைச் சொல்ல வந்த திருவள்ளுவர், 'குழலினிது யாழினிது என்ப' என்று சொல்லுகிறார்.

அதாவது, குழல் என்பது புல்லாங்குழலைக் குறிக்கும். யாழ் என்பது ஒரு வீணையைக் குறிக்கும். இந்தக் காலத்திலே 'பிடிலையும்' ஓரளவு சேர்த்துக் கொள்ளலாம். குழலும் யாழும் இனிமையான இசையை உண்டாக்கும். செவிகளினால் நாம் கேட்டு மகிழ்கிறோம். இந்த இரண்டு இனிமைகளையும் - காதுகளினால் கேட்கும் இன்பம் .