பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

திலேயே அறிவில்லாதவர்களும் நிறைய இருந்திருக்கிறார்கள். அறிவில்லாதவர்களின் பரம்பரையும் இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இறைவனுக்குச் சிறப்பான பெயரிட்டு அழைக்கின்ற திருவள்ளுவர் "வாலறிவன்" என்று கூறினார். அதாவது தூய்மையான அறிவு மயமானவன் என்று பொருளாகும், கடவுளுக்கு விளக்கம் சொல்லுகின்ற தாயுமான சுவாமிகள் *சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே என்று அழைத்தார்.

அறிவுள்ளவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தாலும், தவறுகள் எக்காலத்திலேயும் செய்யாமலேயே இருத்தல் வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சில சூழ்நிலைகளினால் தவறுகள் செய்வதும் உண்டு, அப்படியே செய்தாலும் மீண்டும் செய்யாமல் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும், அது தான் அறிவுடைமை. அறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமுமாகும், செய்த தவறினையே மீண்டும் மீண்டும் செய்தால், அறிவு வேலை செய்யவில்லை என்பது பொருள் ஆகும்.

மாடும் தவறும்

ஒரு வீட்டின் முன்புறத்தில் நெல் காய வைத்திருக்கிறார்கள். அந்தப் பக்கம் போன மாடு ஒன்று நெல்லைப் பார்த்து விட்டு, வந்து தின்னுகிறது. . வீட்டுக்காரர் வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்து, தடியால் அந்த மாட்டை, ஓங்கி அடிக்கிறார். அந்த மாடு ஓடுகிறது. அவர் வீட்டுக் குள் வந்து விடுகிறார்.

மறுபடியும், மாடு வந்து தின்னுகிறது. ஓடி வந்து மீண்டும் அந்த மாட்டை விரட்டுகிறார். அந்த மிருகத்தைத் திட்டுகிறார், அடிக்க அடிக்க வருகிறாயே என்று கடிந்து பேசுகிறார், மிருகத்துக்கு என்ன குணம்? குற்றம் செய்தால் தன்னைத் திருத்திக் கொள்ளாது. அதற்குத் தானே திருந்தும் அறிவு இல்லை.