பக்கம்:சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மூன்றாம்பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்


சிந்தனைச் சிற்பி தோழர் மா. சிங்காரவேலர் இறந்து விட்டார்; இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த வீரர் மறைந்துவிட்டார். இந்தியா உப கண்டத்தின் முதல் பொது உடைமைவாதி காலமானார், மூன்றவது சர்வதேச அபேதவாத அங்கத்தினர் மூவர்; இந்தியாவில், அவர்களில் ஒருவர் இவர். அப்படி ஒருவர் இருந்தாரா? என்றும் கேட்கும், "கதர் ஜுப்பாக்களும்," "காரல் மார்க்ஸ் படிப்போரும்" ஏராளம். சோவியத்திலே பொது உடைமை ஆட்சி ஸ்திரமாவதற்கு முன்னாலேயே, இங்கு சென்னையிலே, கடலோரத்தில், மயிலையில் ஒரு புரட்சி வீரர் உலவிக்கொண்டிருந்தார். உலகிலே காணப்படும் கொடுமைகளைக் கண்டு, மனதிலே கோபம் அலைஅலையாகக் கிளம்ப, அதனால் தூண்டப்பட்டு, யாரும் அதுவரையில் கேட்டறியாத கொள்கையை, பொது உடைமைத் தத்துவத்தைப் புரட்சிக்கனலுடன் கலந்து அளித்து வந்தவரே, தோழர் மா. சிங்காரவேலர் என்பதை, அவர்கள் அறியார்கள். தேசியத் தொழிலாளர் இயக்கங்களிலே அவர் பிரபலமாக இருந்த சிலபல வருஷங்களிலே கூட உரிய ஸ்தானம் அவருக்கு அளிக்கப்படவில்லை; அவருடைய அறிவும் ஆற்றலும் அளவிடப்படவில்லை வெட்டுக்கிளிகளும், பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில், புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்-மறக்கும்படிச் செய்யப்பட்டனர்.