பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் சுற்றுலா

9




1. வேறு வழி இல்லை

மண்ணால் ஆன குடம் ஒன்று இருக்கிறது. அதில் நிறைய நீர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அது முழுதாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரிகிறது.

நேரம் ஆக ஆக, நாமும் மட்குடத்தை மறந்து விடுகிறோம். பிறகு ஒருமுறை சென்று பார்க்கிறோம். குடத்தில் நீர் குறைந்திருக்கிறது.

'குடம் ஓட்டை இல்லையே! பின் எப்படி குறைகிறது என்று யோசிக்கிறோம். கசிவு குடத்தில் இருக்கிறது என்று உணர்கிறோம்.

நீரைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டா லும், நேரம் ஆக ஆக, நீர் குறைந்துகொண்டே வருகிறது. பின்னர் நீரில்லாத மட்குடமாக மாறுகிறது. விரிசல் பெறுகிறது. வீணாகிப் போன உடைந்த பாண்டமாக மட்குடம் போகிறது.

நம் உடலாகிய குடமும் இப்படித்தான்.

உடலாகிய குடத்தில் சக்தி என்னும் நீர் நிரப்பப்பட்டிருக்கிறது. நாளாக நாளாக நீர் என்கிற சக்தி குறைந்து கொண்டுதான் வருகிறது. சக்தியைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும், சக்தி குறையும், மறையும்.

நீர் நிறைந்த முழுக்குடம் என்பது நமது இளமைக் காலம்தான். அந்த நேரத்தில் நம் சக்தியைப் பயன்படுத்தி, செயற் கரிய செயல்களைச் செய்யத் திட்டம் தீட்ட வேண்டாமா! செயல்பட வேண்டாமா!