பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் சுற்றுலா 69 15. பிரச்சினைகள் பேசுகின்றன் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக விழித்துக் கொண்டான் வடிவேலன். எட்டு மணி என்பதுதான் அவனுக்கு அதிகாலைப் பொழுது. அப்படி விழித்து விட்டாலும்கூட, பத்து நிமிடம் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்திருப்பான். பத்து முறை அழைத்தாலும், 'ம்' சத்தம் தான் கேட்குமே தவிர, 'பள்ளி எழுச்சி என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி இருக்கும் வடிவேலன், இன்று காலை 5 மணிக்கே விழித்துக் கொண்டான். பரக்கப் பரக்கப் படுக்கையை விட்டு எழுந்து வந்தான். கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு, சோம்பல் முறித்து, பெரிய கொட்டாவியை சத்தமாக விட்டபடி, திண்ணையில் வந்து உட்கார்ந்து, பெரிதாக நின்று கொண்டிருந்த தூணில் சாய்ந்து கொண்டான். இப்பொழுது அவனது விழிகள் இரண்டும் எதிரே, அதாவது அவன் வீட்டிற்கு எதிரே இருந்த குடிசைமீது ஆவலாக மொய்த்துக் கொண்டிருந்தன. குடிசையை அவன் பார்த்ததே இல்லையா? தினம் தினம் அதன் முகத்திலேதான் விழிப்பவனாயிற்றே! இன்று அதை அப்படிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? அவசியம் மட்டும் அல்ல! அவசரமும் வந்து விட்டது.