பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


காட்சி : 3
(தாயார் சோஸ்ட்ராட்டா அம்மையார், மெசர் நிக்கியா, லிகுரியோ ஆகியோர்)

சோஸ்ட்ராட்டா : இரண்டு வழியும் தீமையானதென்றால், தீமை குறைவாயுள்ள வழியைத் தேர்ந்தெடுப்பதுதான் ஒரு புத்திசாலியின் கடமை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பிள்ளைப்பேற்றை அடைவதற்கு வேறு வழியில்லையென்றால், அந்த வழியை மனமொப்பி ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

மெசர் நிக்கியா : நானும் அதே முடிவுக்குத்தான் வந்தேன்!

லிகு : (சோஸ்ட்ராட்டாவிடம்) நீங்கள் உங்கள் புத்திரியைப் போய்ப்பாருங்கள். அதற்கிடையில் நாங்கள் அவளுடைய மதகுருவான டிமோவியோ சாமியாரைப் போய்ப் பார்த்து நிலைமையை விளக்கிச் சொல்கிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

சோஸ் : அப்படியே செய்யலாம் நான் லுக்கிரிசியாவைத் தேடிப்பிடித்து எப்படியாவது சாமியாரிடம் கூட்டிக்கொண்டு வருகிறேன்.

(அவள் போகிறாள்)

லிகு : இந்த மத குருமார்கள் இருக்கிறார்களே, பெரிய ஆசாமிகள், மகா தந்திரசாலிகள் அவர்களுக்கு நம் எல்லோருடைய பாவங்களும் மட்டுமல்லாமல், தங்கள் தங்கள் பாபங்களும் நன்றாகத் தெரியும். அதனால், அவர்களை நன்றாக அறிந்தவர்கள், தவறான வழியில் அவர்கள் ஆதரவைப் பெறுவது மிக எளிது. நீர் ஒன்றும் பேசவேண்டாம். நானே அவரிடம் பேசிக்கொள்கிறேன்.

நிக்கியா : நான் என்னதான் செய்யவேண்டும்?

லிகு : நான் சைகை காட்டினால் ஒழியப் பேசவேண்டாம். நீர் செவிடு என்று அவரிடம் சொல்லிவிடுகிறேன். எல்லாம் நன்றாக முடியும்.

நிக்கியா : சரி.