பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

1512ஆம் ஆண்டுவரை, பதினைந்து ஆண்டுகள் நிலைத்து இருந்திருக்கிறான். இதற்கிடையே அவன் இத்தாலியில் உள்ள சிறிய ராஜ சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல ராஜ்யத் தலைநகரங்களுக்கும் பிளாரென்ஸ் ராஜ்யத்தின் தூதனாகப் போயிருக்கிறான். அவனுடைய திறமையால் பிளாரென்ஸ் குடியரசு அரசாங்கம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறது. அவனும், இப்படிப் பல தேசங்களுக்கும் போய்வந்ததன் பலனாக அரசியலைப் பற்றியும், ஐரோப்பிய நாடுகளைப் பற்றியும் நன்றாக அறிந்து அவற்றைப் பற்றித் தனக்குள் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. 1503-ஆம் ஆண்டு ரோமாக்னாகோமகன் சீசர் போர்ஜியாவிடம் தூது சென்று திரும்பியபோது. அவன் தன்னுடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தான். இராணுவத் துறையில் தன் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்ட பிறகு, 1506ஆம் ஆண்டில் அவனுக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது.

பிளாரென்ஸ் ராஜ்யத்திற்காகவென்று ஒரு மக்கள் படையமைப்பை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு விசேஷ இலாகாவிற்கு அவன் செயலாளராக நியமிக்கப்பட்டான். அடுத்த சில ஆண்டுகளில் அவன் மிகுந்த செல்வாக்கையடைந்தான். வெற்றிப்படியின் உச்சிக்கே சென்றுவிட்டான் என்று கூடக் கூறலாம். ஆனால், அதே சமயம் பல எதிரிகளையும் உண்டாக்கிக் கொண்டான். 1512-ஆம் ஆண்டில் பழைய ராஜ வமிசத்தினரான மெடிசி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு நகர ராஜ்யத்தின் ஆட்சியுரிமை திரும்பவும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி பதவியினின்றும் நீக்கப்பட்டான்.

மெடிசி குடும்பத்தினருக்கு எதிராக, அவர்கள் அரசுரிமையைக் கவிழ்ப்பதற்காக ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களில் மாக்கியவெல்லியின் பெயரையும் அவனுடைய எதிரிகள் சேர்த்து விட்டார்கள். குடியரசுவாதிகளின் சதிக்கு மாக்கியவெல்லி உடந்தைக்காரனாகவோ அல்லது அனுதாபியாகவோ இருக்கக் கூடுமென்று சந்தேகப்பட்டார்கள். அதற்காக அவனைப் பிடித்து 1513-ஆம் ஆண்டில் ஒரு விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் அவன் குற்றமற்றவனென்று விடுவிக்கப்பட்டான்.