பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாதுகாப்பாகவும், வசதியாகவும் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பரம்பரையரசனைக் காட்டிலும் புதிய அரசன் தான் என்னென்ன செய்கிறான் எப்படியெப்படி செய்கிறான் என்று அதிகமாகக் கவனிக்கப்படுகிறான்.

ஒரு புதிய அரசன் மக்கள் இதயத்தைக் கவர்ந்துவிட்டால் அவர்கள் அவனுக்குப் பெரிதும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். பழைய இரத்த வாரிசுகளைக் காட்டிலும் அவனைப் போற்றுவார்கள். ஏனெனில் மக்கள் தாங்கள் வாழும் தற்காலத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுவார்களே தவிர இறந்தொழிந்து சாவதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. மற்ற விஷயங்களில் குறைபாடில்லாமல் இருந்தால் மக்களே அரசனுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒரு புதிய அரசை ஏற்படுத்தி அதற்கு நல்ல நீதி முறையையும், நல்ல படையமைப்பையும் நல்ல நட்புறவுகளையும் ஏற்படுத்திய அரசன் இரட்டிப்பு கீர்த்தியடைகிறான். மன்னனாகவே பிறந்து மதியில்லாமல் தன் அரசுரிமையை இழந்தவன் இரட்டிப்பு நிந்தனைக்காளாகிறான்.

பல ஆண்டுகளாகத் தங்கள் உடைமையாக இருந்த ராஜ்யத்தை இழக்கும்படி நேர்ந்தால் அதற்காக அரசர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை - நோவது அர்த்தமற்றது. தங்கள் அசட்டுத்தனத்திற்குத்தான் வருந்த வேண்டும். ஒரு சில அரசர்கள் ஆபத்துக் காலத்தில் நாட்டைக் காப்பதற்குப் பதிலாக நாட்டை விட்டுவிட்டு ஓடுவதற்கே நினைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் அகந்தையைக் கண்டு கோபமுற்ற மக்கள் அவர்களை எதிர்த்து நின்று விரட்டிவிட்டுத் தங்களைத் திரும்பவும் அழைத்து அரசுகட்டிலில் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். மற்றவர்களுக்குத் தேவையிருக்கும் வரையில் இந்த - நடவடிக்கை நல்லது தான். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் கைவிட்டு ஓடுவதுபோல் அதிமோசமான காரியம் வேறு எதுவும் இல்லை. மற்றவர்கள் தூக்கிநிறுத்துவார்கள் என்பதற்காக ஒருவன் வீழ்ச்சியடைவது விரும்பத்தக்கதில்லை. ஓர் அரசன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி இதுவல்ல. ஏனெனில், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாமல், ஒரு கோழையைப் போல் மற்றவர்களால் காப்பாற்றப் படுகிற இழிவான வழி இது. தன்னைத் தானே நம்பித் தன் சொந்தத் திறமையை நம்பித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுவதே நல்லது, உறுதியானது, நிலையானது!