பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

கிரேக்க தேசத்துப் பேரரசனாக மாறினான். அவன் தன் குடிமக்களை ஆட்டு மந்தைகளை நடத்திச் செல்வது போல் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு விரட்டிக்கொண்டு சென்றான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது நாகரிகத்திற்குப் புறம்பான பெருங்கொடுமையான செயல்தான். இருப்பினும் மனிதத் தன்மையுள்ள முதல் வழியைக் கடைப்பிடிக்க விரும்பாத எவனும், தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினால், இந்தக் கொடிய நடைமுறையைத்தான் கையாள வேண்டும். ஆனால், பொதுவாக மனிதர்கள் இரண்டுக்கும் இடையேயுள்ள முறையையே மோசமான வழியையே பின்பற்றுகிறார்கள். ஏனெனில், முழுக்க முழுக்க நல்லவராயிருக்கவோ அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவராயிருக்கவோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

நன்றி கெட்டவர் யார்?

நன்றி கெட்டவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு தேசத்து மக்களா அல்லது அரசனா என்று அறிந்து கொள்வதற்கு முன் நன்றி கெட்ட தனம் எப்படியுண்டாகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். லோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றிகெட்டதனம் உண்டாகிறது. ஒரு தேசத்து மக்களோ அல்லது மன்னனோ ஒரு படைத்தலைவனை வெளி தேசத்தின்மீது படையெடுத்து வரும்படி அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் தன் வெற்றிகளினால் பெருங் கீர்த்தியடைந்து திரும்பி வந்தால் மன்னனோ அல்லது மக்களோ, அவனுக்கு வெகுமதியளித்துச் சிறப்பிக்க வேண்டும். ஆனால், தங்கள் லோபகுணத்தினால் அவனுக்கு வெகுமதியளிக்காமல் பெருந்தீமையிழைத்து அவகிர்த்தியைத் தேடிக் கொள்கிறார்கள், இதற்கு டாசிட்டஸ் கீழ்க்கண்டவாறு காரணம் கூறுகிறான். “மனிதர்கள் நன்றியற்றவராக நன்மை செய்வதைக் காட்டிலும் நன்றிக் கேடாகத் தீமை செய்யவே தயாராயிருக்கிறார்கள். ஏனெனில், நன்றி காட்டுவது பெருஞ் சுமையாகவும், கேடிழைப்பது இன்பந் தருவதாகவும் இருக்கிறது”. சரித்திரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு படைத் தலைவன் அடைந்த பெரு வெற்றியே அவனுக்குக் கசப்புத் தரக் கூடியதாகி விடக் கூடும். அவன் அடைந்த வெற்றிக்குக் காரணம் அவன் திறமையல்ல என்றும், எதிரியின் கோழைத்தனம் அல்லது கூடச் சென்ற