பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

21



151. “எந்த மனிதன் தன்னுடைய சொந்த ஆசா பாசங்களிலிருந்து விடுதலைப் பெற்று வருகின்றானோ அவனுக்கு அவனுடைய சுதந்தரம் தானே வந்து சேரும்.”

152. “ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.”

153. “உலகியற்கை - நியதி எதற்கும் அழிவில்லை. மாற்றங்களே ஏற்படும். குப்பைகள் கூட அழிவதில்லை. படைப்பாற்றல் உடைய உரங்கள்ாக உருமாற்றம் பெறுகின்றன.”

154. “நமது சமயம் ஒழுங்கமைவுகள் பெறாததற்குக் காரணம் அது மிகப் பழமையானது என்பது தான்.

155. “இறைவனே! நீ இவ்வளவு கருணை கொண்டு என்னை வாழ்விக்க, கற்சிலையில் எழுந்தருளிக் கருவறையில் சிறைப்பட்டாய்! உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் திருவுருவத்தை ஆரத்தழுவி உச்சிமோந்து அழவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது!

என்ன செய்ய? கண்ணப்பர் காலத்தில் இல்லாத தடைகள் தோன்றிவிட்டனவே! கடவுளே ஏன் இந்த நிலை? கதவைத் திற! வெளியே வா என்னைத் தழுவி முத்தமிடு வாழ்த்து!”

156. “இந்துக்கள் ஒருமைப்படவேண்டும் என்ற ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்குப் பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது.”