பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சிந்தாநதி டிருக்கிறாள். ஃபீட்டன் பாக்கு. அம்மாவே வாசனைப் பாக்குத் தயாரிப்பாள். அம்மா தினம் வெற்றிலை போட்டுக் கொள்வாள். கைக்கு அடங்கும் ஒரு கூழாங்கல்லால், இரண்டு மூன்று பாக்குகளை ஒன்று சேர்த்து, மறு கையால் தடுத்துக்கொண்டு, என்னதான் ஜாக்கிரதையாகத் தட்டினாலும், பாக்குக்குத் தெறிக்கும் சுபாவம் உண்டே! ஒரு சிதர் தெறித்து, C.k.நாயுடு Sixer மாதிரித் திண்ணைக்கும் உயரமாக எழும்பி, நேரே என் மடியில் விழுந்தது. லட்டு catch. லபக்கென்று எடுத்து வாயில் போட்டுத் தாடையில் அடக்கிக் கொண்டேன். கொஞ்சம் பெரிய துரள்தான். உடனேயே சுரக்கத் தலைப்பட்டு விட்ட உமிழ் நீரில் ஊற வைத்து- கடித்தால் எட்டு ஊருக்குச் சத்தம் கேட்குமே!- அதக்கி எப்படியோ விழுங்கியும் விட்டேன். அண்ணா கணக்கில் ஒரு சிக்கலான இடத்தை விளக்கிக் கொண்டிருந்தார். கணக்குப் புத்தகத்தில் குனிந்தபடியே அது பாட்டுக்கு அது! அம்மா தெறித்துப்போன துண்டத்தைத் தேடு தேடென தேடுவதைக் காண உள்ளூரச் சிரிப்பாயிருந்தது. ஆனால், சுருக்கவே அம்மா தேடுவதை விட்டு, மறந்தும் போனாள். உண்மையிலேயே அது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? நானும் மறந்து விட்டேன். அப்படி ஒன்றும் ருசியில்லை. பக்குவம் இன்னும் பண்ணவில்லையே. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நெய். நினைக்கையிலேயே நாக்கை ஜிவ்' வென்று இழுத்தது. ஆனால், இப்போ, ஒரு கெட்டிக் கசப்புத்தான் கண்ட மிச்சம். “ஏண்டா, பாக்குத் தின்னாயா?”