பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


"கையினிற் செறிந்த முடியினைச் சிதறிக்
   கடைசியர் கரங்கள்தொட் டொழுங்காய்ச்
செய்யினிற் பதிப்பத் துளிகாஞ் சேறு
   தெறித் திடும் செழுமுகச் செவ்வி
துய்யவெண் டிரைப்பாய்ச் சுருட்டிமே வெறியும்
   தொடுகடல் முகட்டிடை யெழுந்து
வையகம் சிறப்ப வருமுழு மதியும்
   மறுவும் ஒத்திருந்தன மாதோ".[1]

இன்னும், ஆசிரியர், நிலவைப் பாடுமிடத்துக் கூறும் ஒரு கற்பனையையும் இங்கே கூறவேண்டும், வான வீதியிலே வலம் வரும் நிலவோ மறுவுடைய நிலவு நகரில் வாழும் மங்கை யாரோ, மறுவிலாத மதிமுகத்தினர். மதியின் மறுவைத் துடைத்து விட்டால்தான் அம்மதிக்கு மங்கையரை உவமிக்க முடியும். ஆகவே அரண்மனையின் மேலே பறக்கின்ற கொடி அரண்மனையில் உறைகின்ற மகளிர்தம் முகத்தைப் போலவே நிலவையும் கறையில்லாதது ஆக்கத் தன் கைகொண்டு துடைப்பதாகக் கற்பனை செய்திருக்கிறார் உமறு.

"...கடுவினை யடர்ந்த கொடு வினை விழியார்
கறை தவிர் மதிமுகம் கண்டோ
படர்தரு மாடக் குடுமியின் விசித்த
பைங்கொடி மதிமறுத் துடைக்கும்" [2]

இனிய இயற்கைக் காட்சிகள்

கம்பர். இளங்கோவை அடியொற்றி ஆசிரியர் அமைத்துள்ள இயற்கை வருணனைகளையும், நிலவின்பால் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டையும் கண்ட நாம், இந்நூலில் இன்னும் அமைத்துள்ள இனிய இயற்கைக் காட்சிகளையும் காண்போம்.



  1. 1. சீறா. நாட்டுப்படலம் 30
  2. 2. சீறா. நகரப்படலம் 4