பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


ஒன்று உண்டு. சரீரத்திற்கு மயக்கம் வருதல் அபாயகரமானது. அத்தகைய அபாயகரமான மயக்கத்தையும் உண்டாக்க வல்லது அது. நண்பர்களைப் பிரிப்பதும் எளிதான காரியம் ஒன்றன்று. அத்தகைய நட்புறவையும் நொடிப்பொழுதில் உடைத்தெறிந்து நண்பர்களை எதிரிகளாக்க வல்லது அது. எப்பொழுதும் ஒருவன் பேசும் போது பொறுப்புணர்ச்சியுடனே பேசுதல் வேண்டும்.ஆனால், அதுவோ பேசுவது இன்னது என அறியாது ஒருவனைப் பேசவைக்கும் சர்வ வல்லமையும் உள்ளது. அதுதான் மது. கள்ளாகிய உணவும் வெறியை-போதையை உண்டாக்கும் மதுபானமாகிய குடியுமாகும். அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. ஹறாமாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹிஜ்றி ஐந்தாம் ஆண்டிலேதான் அல்லாஹு த ஆலா வினால் மதுபானம் முஸ்லீம்களுக்கு ஹறாமாக்கப்பட்டது. இத்தகைய தடை விதித்து அருளப்பட்ட திருமறை வாக்கியங்களை அண்ணல் நபி (சல்) அவர்கள் தங்களது அசுகாபித் தொழர்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கிக் காட்டினார்கள். இக்கருத்துக்களையே உமறுப் புலவர் இவ்வாறு அமைத்துப் பாடியுள்ளார்.

"தள்ளரிய மனத்தறிவு தனையகற்றி
மெய்மயக்கந் தந்து நட்பா
யுள்ளவரைப் பகையாக்கி யுரைப்பதிவை
யெனவறியா துரைக்கப் பண்ணுங்
கள்ளுணவும் வெறிமதுவும் ஹறாமெனவ
யத்துவரக் கண்டன் பாகி
விள்ளரிய மறைப்பொருளை சகுபிகளுக்
குரைத்தெவர்க்கும் விளக்கினாரே"[1]

ஹிஜ்றி ஐந்தாம் ஆண்டிலேதான் ஸெயினப் (றலி) அம்மையாரை நபிகள் பெருமானார் திருமணம் புரிந்தார்கள். இவர் சகுசு (ஜஹ்ஷ்) என்பவரின் புதல்வி. ஸெய்னப் (றலி) அவர்களை வருணிக்க வந்த உமறுப்புலவர் உருவக வாயிலாக


  1. 1. சீறா, ஈமான் கொண்ட படலம் 2.