பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சீறாப் பதிப்புகளும் உறைகளும்


இரா. முத்துக்குமாரசாமி எம். ஏ; பி. லிப்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்து விளங்குவது செழுந் தமிழ்க் காப்பியம் சீறாப்புராணம். நபிகள் பெருமானின் வரலாற்றை நல்ல இனிய தமிழில் பாவடியில் நமக்கு வடித்துத் தந்தவர் உமறுப்புலவர். அவர் தம் அரிய படைப்பான சீறாப்புராணத்தின் பதிப்புக்களும், உரைகளும் ஆய வெழுந்ததே இக்கடடுரை.

ஆசு, மதுர, சித்திர, வித்தாரக் கவிஞரான உமறுப் புலவர் எட்டயபுரத்து எட்டப்ப நாயக்கரின் அத்தாணி மன்றக் கவிஞராகத் திகழ்ந்தவர். சேது நாட்டின் அமைச்சராய்த் திகழ்ந்த சீதக்காதி வள்ளலால் கண்டுபிடிக்கப் பெற்றுக் குடத்து விளக்காக இருந்த நிலையிலிருந்து குன்றத்து விளக்காய் உயர்ந்தவர்.

உமறுவின் காலம்

சீறாப்பதிப்புகளைப் பார்ப்பதற்கு முன் சீறா தோன்றிய காலத்தைச் சரியாகக் கணிப்பின் அதன் வரலாறு செம்மையாக அமையும் என்ற நோக்குடன் உமறுப்புலவரின் காலத்தைக் காணலாம், உமறுப்புலவரின் வாழ்க்கையில் குறுக்கிட்டு அவரைத் தடுத்தாட்கொண்டு சீறாப்புராணத்தை எழுதத் தூண்டியவர் வள்ளல் சீதக்காதி ஆவார், சீறாப் புராணச் செய்திகளை, வள்ளல் நபி பெருமான் அவர்கள் வரலாற்றை உமறுப்புலவர் அறிந்து கொள்ள அவரை ஆற்றுப்படுத்தியவர் சீதக்காதியாரின் ஆசானான சதக்கத்துல்லா அப்பா ஆவார்கள், இவ்விருவரது காலத்தையும் அறிந்து கொண்டால் உமறுப்புலவரின் காலத்தைக் கணிப்பது எளிது.