பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நுழைவாயில்


தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்கும் பணியும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கக் தக்கன என்பது புனைந்துரையன்று. உள்ளங்கை நெல்ல்லிக் கனி போன்று தெள்ளத்தெளிய வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.

தமிழை வளர்த்தவர்கள் - வளப்படுத்தியவர்கள் மட்டுமல்ல; ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தமிழை அழிவினின்று தடுத்துக் காத்த பெருமையும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கட்கு உண்டு என்பதை வரலாறு தெளிவாக உணர்த்தவே செய்கிறது. தமிழ் இலக்கிய உலகத்தை நோக்கி விரைந்த படரத் தொடங்கிய இருட் படலத்தை நீக்கியதோடு ஒளியற்றி, செழுமையின் உச்சகட்டத்திற்கு உயர்த்தியவர்கள் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள். இஃது காலச் சுவட்டில் பளிச்சிடும் உண்மை.

தமிழக வரலாற்றில் நான்கு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை வடக்கேயிருந்து படையெடுத்த களப்பிரர்களால் தமிழகமே இருண்ட களமாக ஆகியிருந்தது அரசியலில் குழப்பம், இலக்கியத்தில் தேக்கநிலை. இதுவே வரலாறு கூறும் 'இருண்ட காலம்,

இதே போன்ற இருட்காலச் சூழல் பதினாறு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கி நிலைகுத்தி நிற்கத் தொடங்கியது.

தெலுங்கர், மராட்டியர், கன்னடத்தவர்களின் பிடியிலே சிக்குண்டு சுக்கு நூறாகத் தமிழகம் சிதறுண்டு கிடந்த நிலை. தெலுங்குப் பாளையக்காரர்களின் அரவணைப்பில் தமிழ் இளைப்பாற வேண்டிய அவல நிலை. மராட்டியம். தெலுங்கு மொழிகளோடு பரங்கி மொழிகளும் சேர்ந்து கொண்டு தமிழை மிரட்டிக் கொண்டிருந்த இக்கட்டான காலச்சூழல்.