பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அரசியலில் கருமேகம் கவிந்திருந்தது போலவே புலமையுலகும் ஒழுக்க உணர்வுகளின்றும் சற்று விலகிய நிலையில் சிற்றின்ப உணர்வுகளுக்குப் 'பராக்' கூறிக் கொண்டிருந்த நேரம் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் அளித்துக் கவி புனைந்து செல்வர்களின் சிந்தையைக் குளிர்வித்து, அவர்கள் விட்டெரியும் பிச்சைகளுக்காக அவர்தம் வீட்டு வாசல்களிலே பலமையுலகம் தவமிருந்த நேரமும்கூட.

பெரும் புலவர்கள் என்போரும்கூட ஒழுக்க இலக்கியச் சிந்தனை அறுகியவர்களாக தூது இலக்கியங்களையும் உலாக்களையும், கோவைகளையும், தலபுராணங்களையும் 'கூளப்ப நாயக்கன் காதல்’ போன்ற காமச் சுவை நனி சொட்டச் சொட்டக் கூறும் காதல் இலக்கியங்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

தமிழ் இலக்கிய உலகில் இருள் சூழ்ந்திருந்த இந்தக் கட்டத்தை இஸ்லாமியத் தமிழ்ப் புலமையுலகம் முழுக்க முழுக்கத் தனக்குரிமையுடைய காலமாக ஆக்கிக் கொண்டது எனலாம் இலக்கியச் சுடரேந்தி இருளகற்ற முனைந்து நின்றது. ஒழுக்கவியல் அடிப்படையில் ஒரு பெருங் காப்பியம் மீண்டும் உருவாகாதா என்று இலக்கிய உலகு ஏங்கியதற்கு மாறாகப் பதினைந்து அருந்தமிழ்க காப்பியங்களைத் தமிழுக்குப் பரிசளித்துத் தமிழ்க் காப்பியப் பூங்காவை செழுமையின் உச்சத்திற்கு உயர்த்தியது. தமிழ் இலக் கிய வரலாற்றில் முதன் முறையாக ஒரே இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் நான்கு காப்பியங்களை எழுதிக் குவித்தது இந்தக் கால கட்டத்தில்தான்.

நானூறுக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான இலக்கியங்களை எழுதிக் குவித்தார்கள். 'படைப்போர்’ போன்ற புதிய புதிய இலக்கியத் துறைகளைத் தமிழிலே தோற்றுவித்து வள மூட்டினார்கள்.

தமிழகமே அரசியல் போராட்டங்களில் ஆழ்ந்து கிடந்த சூழலில் இஸ்லாமியத் தமிழ்ப் புலமையுலகு அமைதியான