பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

அறுந்த காற்றாடி
    அந்த வழியாகச் சில சிறுவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒடும்போது தரையைப் பார்த்துக் கொண்டு ஓடவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்கள்.
    அப்படி மேலே என்னதான் இருந்தது? ஒருவேளை அது புறாவாக இருக்குமோ? அதை துரத்திக் கொண்டுதான் அவர்கள் செல்லுகிறார்களோ? இல்லை. அது ஒரு காற்றாடி! அறுந்து போய்க் காற்றிலே பறந்து செல்லும் அந்தக் காற்றாடியைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் சென்றார்கள்.
    அந்தக் காற்றாடி , “வாருங்கள், வாருங்கள்” என்று ஆடி ஆடிக்கொண்டே அவர்களைச் சிறிது தூரம் அழைத்துச் சென்றது; பிறகு, ஒருவர் வீட்டுத் தோட்டத்திற்குள்ளே புகுந்தது; அங்கிருந்த ஒரு கொன்றை மரக் கிளையிலே போய் உட்கார்த்து கொண்டது.
    இதைக் கண்டனர் அந்தக் கூட்டத்தினர். உடனே அந்தத் தோட்டத்திற்குள் புகுந்தனர். சிலர் கொன்றை மரத்தில் ஏறிக் காற்றாடியை எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களைத் தாங்கும் சக்தி அந்த மரக்கிளைகளுக்கு இல்லை. அதனால், அவை முறிய ஆரம்பித்தன. சிறிதுநேரம் முயன்று பார்த்துவிட்டுத் தோல்வியுடன் அவர்கள் திரும்பிவிட்டனர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தான் அந்த வீட்டுக்காரச் சிறுவன், அவனுக்கு அந்தக் காற்றாடியை எப்படியாவது எடுத்துவிட வேண்டுமென்று ஆசை. கூட்டத்தார் திரும்பிச் சென்றதும் அவன் மெதுவாக மரத்தை நெருங்கினான், தணிவாக இருந்த ஒரு கிளையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். அவன் மிகவும் சிறுவனாக இருந்ததால் கிளை முறியவில்லை. அவன் மெல்ல மெல்ல ஒவ்வொரு கிளையாகப் பற்றி மேலே சென்றான்.

17