பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காற்றாடியின் அருகே சென்றுவிட்டான். இதோ இன்னும் ஒருவிநாடியில் காற்றாடி அவன் கைக்கு வந்துவிடும். ஆனால், எதிர்பாராத விதமாக அப்போது ஒரு குரல் வந்து காரியத்தைக் கெடுத்துவிட்டது. “டேய்,டேய்” என்ற அந்தக் குரலைக் கேட்டதும், “ஐயோ, அம்மா பார்த்துவிட்டாளே” என்று அவன் நினைத்தான். உடனே, அவன் உடல் நடு நடுங்கியது; கையிலே பிடித்திருந்த மரக்கிளையை விட்டு விட்டான். மறு விநாடி அவன் கீழே விழுந்தான். விழும் போது முறிந்திருந்த கிளைகளில் ஒன்று அவனுடைய இடது விலாப் பக்கத்தில் பாய்ந்துவிட்டது! உடனே அங்கிருந்து இரத்தம் ‘குபுகுபு' என்று வெளியே பீறிட்டுக்கொண்டு வந்தது. ஆனால் நல்ல காலம், அவன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. நாட்டு வைத்தியர் ஒருவர் பச்சிலைச் சாற்றால் அந்தக் காயத்தைப் பத்தே நாட்களில் குணப்படுத்திவிட்டார்.

    காயம் குணமானாலும் அந்த வடுமட்டும் போகவில்லை. அப்போது ஏற்பட்ட வடு 1953-ம் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதிவரை அந்த உடலை விட்டு மறையவே இல்லை. அன்றுதான் அதுவும் அந்த உடலுடன் எரிந்து மறைந்துவிட்டது. அப்படியானால் அந்த உடல் யாருடையது?
    'தமிழ்த் தென்றல்’, ‘தொழிலாளரின் தூயதலைவர்', ‘எல்லார்க்கும் நல்லவர்’ என்றெல்லாம் போற்றப்படும் திரு. வி. கலியாணசுந்தர முதலியாருடையதுதான் அந்த உடல்:

18