பக்கம்:சின்னஞ்சிறு வயதில்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போய்க் காட்டுவான்; அழகாகப் பாடி விளக்கியும் கூறுவான். சுப்பையாவின் திறமையைக் கண்டு அரசர் வியப்படைவார்; பாராட்டிப் பேசுவார். ஆனாலும், மகன் பாட்டெழுதும் செய்தி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது

    ஒருநாள் எட்டயபுரம் அரசர் சின்னச்சாமி ஐயரிடம், 'உங்கள் மகன் அற்புதமாகப் பாட்டு எழுதுகிறான். திரு ஞானசம்பந்தரைப் போலவே அவனுடைய புகழும் எங்கும் பரவப் போகிறது. எட்டயபுரத்தின் பெருமையும் ஒங்கப் போகிறது என்று சொன்னார்.
    அரசர் சொன்னதை அவர் முதலில் நம்பவில்லை. ஆனால், நேரிலே பார்த்த பிறகும் நம்பாமல் இருக்கமுடியுமா? தம்முடைய மகன் மிகவும் அழகாக. இயற்கையாகப் பாடல் எழுதுவது கண்டு அவர் பூரித்துப் போய்விட்டார்!

சுப்பையாவின் புகழும், எட்டயபுரத்தின் பெருமையும் எங்கும் பரவப்போவதாக எட்டயபுரம் அரசர் அன்று சொன்னரே, அது பிற்காலத்தில் நூற்றுக்கு நூறு பலித்து விட்டது! ஆம், அன்று வெறும் சுப்பையாவாக இருந்த அவன், இப்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று எல்லாராலும் போற்றப்படவில்லையா!

50