பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.

107


நடப்பேன் என்று உறுதி செய்து கொடு” என்றனர். அவனும், என் மகன் திரும்பி வந்தபின்னும் நான் குடியை நிறுத்தாமல் இருந்தால் மதுபானச் சால்களின் கீழ் அகப்பட்டு நசுங்கியோ, மதுக்கிண்ணம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறியோ, மதுக் குளத்தில் வீழ்ந்து மூழ்கியோ மடிவேனாக” என்று சூளுரை செய்தான். நிறைவு அடைந்த நண்பர்கள் “உன் மகன் இப்போது எங்கே இருக்கிறான்?” என்று வினவியதும் அவன் சொன்னான் “அவன் தற்போது “அண்ணல் காந்தி நகர்” என்னுமிடத்தில் எனக்காக மது வாங்கச் சென்றிருக்கிறான்” என்று.

101. நீதியின் கண்களில் நியாயமே

வழக்கொன்றில் வாக்கு மூலங்களைக் கேட்பதற்காக, வழக்காளியையும், எதிர் வழக்காளியையும் மன்றத்திற்கு அழைத்து வருமாறு தன் ஏவலனுக்கு ஆணையிட்டார். கையூட்டு வாங்குவதில் கொஞ்சமும் அஞ்சாத அரசு அதிகாரியொருவர், மனுதாரர் 500 பணத்தை அதிகாரிக்கு அளித்தார். மாற்றுக் கட்சிக்காரரும் இதனைக் கேள்விப்பட்டு அதைப்போல் இருமடங்கு பணத்தை அதே அதிகாரிக்குத் தந்தார்.

ஆய்வுரைத் தீர்ப்பின் போது அதிகாரி வழக்குத் தொடுத்தவருக்குச் சவுக்கடி தண்டனை வழங்கினார். இரக்கத்துக்குரிய வழக்குத்தொடுத்தவரோ தான் 500 பணம் தந்ததைக் கைசெய்கையால் சுட்டிக்காட்டி, “என் வழக்கில் நேர்மையிருக்கிறது நடுவரே” என்றான். அதிகாரியோ பதிலுக்கு எதிராளி இருமடங்கு கையூட்டுத் தந்ததைச் (சமிக்ஞை) கைசெய்கை மூலம் சுட்டிக்காட்டி, “எதிரொளியின் கூற்றிலும் இரு மடங்கு நேர்மை உள்ளதே” என்றார்.