பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுக்கோட்டை அழகிரிசாமி 105 ஆதாரமாகக் காட்ட ஆரம்பித்ததும், 'நிறுத்து தம்பி! அதைப் பற்றி உனக்கும் ஒன்றும் தெரியாது, எமக்கும் ஒன்றும் தெரியாது” என்று பதில் கூறினோம்! இவற்றையெல்லாம் எங்களுக்குக் கூறித் தந்தவர் பெரியார்தான். சுயமரியாதைத் தத்துவத்தையே நமக்கும் நமது இவ்வுலகத்திற்கும் அளித்தவர் பெரியார்தான்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததும் அவரேதான். இந்தப் பெருமையில் பங்குகொள்ள வேறு யாருக்கும் உரிமையும் கிடையாது.

அவர் தமது சுயமரியாதைத் தத்துவத்தின் மூலம் நமக்கு எதையும் எளிதாக்கித் தந்தார். நமது அறியாமையை அகற்றி நமக்குப் பகுத்தறிவு ஊட்டினார். நமது ஏழ்மையையும் கூட மறக்கச் செய்தார். ஏழை, பணக்காரன் என்பதில்லை; தொழிலாளி முதலாளி என்பதில்லை; அனைவரும் தோழனுக்குத் தோழன்தான் என்ற மனப்பான்மையை ஊட்டினார்; அதை வளர்த்தார்.

ஜமீன்தார்களை முரட்டுப் பணக்காரர்கள் என்றார்; கடவுளை வெறும் உருளைக் கல் என்றார், பிராமணியம் அந்தக் கடவுளுக்குத் தூண்; அத்துணைச் சுக்கு நூறாக்கினால்தான் நாம் இன்ப வாழ்வு வாழ முடியும் என்றார். இவற்றைக் கூற அவர் ஒரு சிறிதும் அஞ்சியதில்லை. . . . . ..

யாரோ ஒரு அன்பர் சற்றுமுன் அஞ்சா நெஞ்சம் படைத்த அழகிரிசாமி என்று என்னைப் பாராட்டினார். எனக்கு அஞ்சா நெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான். அவர் எனது அறிவிலிட்ட வித்துதான் என்னை அஞ்சா நெஞ்சமுடையவனாக்கியது.

கடவுளென்றால் அதெல்லாம் "வெறும் புருடா" என்று கூறினார். "மதம் மடமையின் விருந்து" என்று புகன்றார். புராணம் ஒரு ஏமாற்று வித்தை” என்றார்: “பிராமணியம் ஒரு படுமோசப் பாதகம்” என்றார். சாத்திரங்களைக் “குப்பை” என்று குறித்தார். அப்படி எதைக் கண்டு நாமெல்லாம் அஞ்சினோமோ - எதற்கு நாமெல்லாம் அடிபணிந்திருந்தோமோ - எதை நம்மவர்கள் சிலர் பெருமை என்றுகூட நினைத்து வந்தார்களோ அவற்றையெல்லாம் அறிவு கொண்டு விளக்கி நமது வாழ்க்கையை ரொம்ப லகுவாக்கினார்; நமது துன்பங்களையெல்லாம்கூட மறக்கச் செய்தார். ... ...: -

படித்தவர் - படியாதவர்கள், ஜமீன்தார்கள் - குடியானவர்கள். உத்தியோகஸ்தர்கள் - குமாஸ்தாக்கள், பணக்காரர்கள் - ஏழைகள் ஆகிய சகலரையும் நமது கண்களுக்கு ஒரே மட்டமாக்கினார்.