பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சிறந்த சொற்பொழிவுகள்

பாம்புக்கு அநேக கோவில்கள் கட்டப் பெற்றுள்ளன. இருந்தும் பாம்புக் கடியினால் இறப்பவர்களின் தொகை குறையவில்லை. கூடிக் கொண்டுதான் போகிறது. பாம்புக் கடிக்கு மந்திரத்தைப் பெரிதாக நம்புகிறார்கள். மந்திரம் ஜெபிப்பவரே கடிபட்டவருக்கு உள்ளே சாப்பிடவும் மருந்து கொடுக்கிறார். அந்த மருந்தின் மூலமாக விஷத்தை இறக்க முடியும் என்றால், ஒரு பாம்பை விட்டுக் கோழியை, நாயைக் கடிக்கச் செய்யலாம். அவைகளைக் காப்பாற்றிவிட்டால் மந்திரத்தை நம்பலாம். இந்த விஷயத்தை மந்திரம் போடுபவரிடம் கேட்டுப் பாருங்கள், உண்மை தெரியும்.

மந்திரம் என்பது சொற்களே. எல்லாச் சொற்களும் மந்திரத்தில் அடங்கியுள்ளன. சில சொற்களுக்கு மாத்திரம் எப்படி இவ்வளவு செல்வாக்கு வந்தது? என்றால், அது மக்களின் நம்பிக்கையைப் பெற்று மூடப் பழக்கத்தை வளர்த்து விட்டதுதான் காரணம்.

மந்திரத்தால் மாங்காய் விழுமா? அப்படி விழுந்த மாங்காய்கள் எத்தனை? அதைச் சாப்பிட்டவர்கள் எத்தனை பேர்? பாமரமக்கள் மந்திரம், மந்திரம் என்று மயங்குகிறார்கள். அறியாமையை வளர்க்கவே மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக 'ஓம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். மற்றச் சொற்களைப் போலவேதான் இந்தச் சொல்லும். இதற்கென்று தனியாக எந்த விசேடமும் இல்லை. ஆனால், இந்த ஒரு வார்த்தைக்கு மட்டும் எத்தனை அர்த்தங்களைக் கற்பித்து எத்தனை வேத நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதை உச்சரிப்பதிலேயே ஒரு பயத்துடன் உச்சரிக்கிறார்கள். பாமர மக்களை, ஏன் படித்தவர்களைக்கூடப் பயம் காட்டி ஒருசிலரின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காகவே இது போன்ற மந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சந்தியாவந்தனம் என்று சொல்லப்படும் காயத்திரி ஜபத்தில் அடங்கியுள்ள சொற்கள் அனைத்தும் மற்றச் சொற்களைப் போன்றவையே. ஆனால் அச்சொற்களை யார் காதுக்கும் படாமல் குளக்கரையிலோ அல்லது நதிக்கரையிலோ அசைவற்று நின்றுகொண்டு சூரியனை நோக்கிச் சொன்னால் புண்ணியம் உண்டு என்று சொல்லி மூட நம்பிக்கையை உண்டாக்கிவிட்டார்கள்.

மனிதர்களில் பெரும்பாலோர் ஏதோ ஒருவகையில் தவறான வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருபவர்கள்தாம். அனைவருக்கும் மனச்சாட்சி என்று ஒன்று இருப்பதால் செய்த தவறுகளுக்குப் பரிகாரம்